சிதம்பரம், டிச. 6:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சிதம்பரத்தில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பே ரணி சிதம்பரம் தெற்கு சன்னதியிலிருந்து புறப்பட்டு மேலவீதி வழியாக வடக்குவீதி தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. பேரணியில் 500 பெண்கள் உள்ளிட்ட 1500 பேர் பங்கேற்றனர். பின்னர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமை வகித்துப் பேசினார்.
அவர் பேசியது: பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் ஆணையம் 17 ஆண்டுகள் கழித்து ரூ.8 கோடி செலவு செய்து 48 முறை ஆயுள் நீட்டிப்பு பெற்று தனது அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அறிக்கையில் விடுதலை பெற்ற இந்தியாவில் காந்தியடிகள் படுகொலைக்கு பிறகு நடைபெற்ற மிகப்பெரும் பயங்கரவாதச் செயல்களுக்கு காரணமான தீயசக்திகளை தெளிவாக அடையாளம் காட்டியுள்ளது. லிபரான் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ள 68 பேர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். லிபரான் ஆணைய அறிக்கை பாபர் மசூதி இடிப்பு வழக்கை நடத்தி வரும் மத்திய புலனாய்வுத் துறையிடம் மேல் நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதை வரவேற்கிறோம் என ஜவாஹிருல்லாஹ் கூறினார்.
மா நில துணைச் செயலாளர் எஸ்.எம்.ஜின்னா, மாவட்டத் தலைவர் எம்.அபுபக்கர்சித்திக், மாவட்டச் செயலாளர் வி.எம்.ஷேக்தாவூத், முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.அஷ்ரப்அலி, இ.மகபூப்உசேன், நகரத் தலைவர் இஸ்மாயில், செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக