பண்ருட்டி, டிச. 5:
பண்ருட்டி பகுதியில் மணிலா விதைப்புப் பணி தீவிரம் அடைந்துள்ளது. ஆள்கள் பற்றாக் குறையால் இப்பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் விவசாய விளை பொருள்களில் நெல், கரும்புக்கு அடுத்தப்படியாக எண்ணை வித்தான மணிலா அதிக அளவு நிலப்பரப்பில் பயிரிடப்படுகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் மணிலா விதைப்பு செய்யப்படும். இருப்பினும் மழையால் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தால் அநேக விவசாயிகள் கார்த்திகை தீபம் முடிவடைந்ததும் விதைப்புப் பணிகளை தீவிரப்படுத்துவர். தற்போது கார்த்திகை தீபம் முடிவடைந்ததை அடுத்து மணிலா விதைப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுகு றித்து மாளிகம்பட்டு விவசாயி ஆறுமுகம் கூறியது: கார்த்திகை தீபத்துக்கு முன் மணிலா விதைத்தால் மழையால் சேதம் அடையும். இதனால் தீபம் முடிந்து தான் மணிலா விதைப்பு தீவிரம் அடையும். ஆள் பற்றாக் குறையால் மணிலா விதைப்பு பாதிப்படைந்துள்ளது. விவசாயத் துறை மூலம் சான்று அளிக்கப்பட்ட மணிலா விதை கிடைக்கவில்லை. இதனால் தனியாரிடம் இருந்து வாங்கி விதைக்கின்றோம். இதன் முளைப்புத் தன்மை மற்றும் காய்ப்பு திறன் போகப்போகத்தான் தெரியும் என விவசாயி ஆறுமுகம் கூறினார்.
இது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் பி.ஹரிதாஸ் கூறியது: மணிலா விதைப்பு பருவத்துக்காக பண்ருட்டி வட்டத்துக்கு 2 டன் மணிலா விதை பெறப்பட்டு, கடந்த 15 நாள்களுக்கு முன்னரே விவசாயிகளுக்கு விநியோகம் செய்து விட்டோம். தற்போது விதை இருப்பு இல்லை என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக