கடலூர், டிச. 6:
நெல்லிக்குப்பம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ஃபீடர் சாலையோரம் வசிப்பவர்கள் பிரச்னைக்கு, கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியின் முயற்சியால் ஞாயிற்றுக்கிழமை தீர்வு காணப்பட்டது.
நெல்லிக்குப்பம் ரயில்வே ஃபீடர் சாலையோரம் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவற்றில் 40 வீடுகள் ரயில்வே ஃபீடர் சாலையையொட்டி அமைந்து உள்ளன. இவற்றில் வசிப்போர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே ஃபீடர் சாலையையே தங்கள் பொதுப் பாதையாகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில் பாதைத் திட்டத்தில் பல ரயில் நிலையங்களுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்திலும் ரயில்வே ஃபீடர் சாலையையொட்டி வடக்குப் பகுதியில் 300 மீட்டர் நீளத்துக்கு மதில்சுவர் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பல வீடுகளின் பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன. மதில் சுவரும் சிறிது தூரத்துக்குக் கட்டப்பட்டது. இதனால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிப்போர் பாதிக்கப்பட்டனர் இந்த வீடுகளில் யாராவது இறந்தால்கூட சடலத்தை வெளியே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சிக் கடைகளால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கடலூர் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரியிடம் முறையிட்டனர்.
அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, பிரச்னைக்கு உரிய இடத்தை கே.எஸ்.அழகிரி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். இதற்காக கே.எஸ்.அழகிரியின் வேண்டுகோளை ஏற்று, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பிரமணியமும் சிறப்பு ரயிலில் நெல்லிக்குப்பம் வந்தார். இருவரின் வருகையையொட்டி அப்பகுதி மக்கள் பெருமளவில் அங்கு திரண்டனர். இருவரும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினர்.
பின் னர் அழகிரி எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியது: பாதிக்கப்படும் வீடுகளுக்காக 5 அடி நிலம் விட்டுக் கொடுக்குமாறு ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்து இருக்கிறேன். ரயில் நிலையத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்களின் பிரச்னையைத் தீர்க்க, அங்கு வழிவிட்டு ரயில்வே மதில் சுவர் கட்டுமாறு தெரிவித்தேன். பாதிப்பை ஏற்படுத்தும் மாட்டிறைச்சிக் கடைகளை அகற்றினால் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக கோட்ட மேலாளர் தெரிவித்தார். மாட்டிறைச்சிக் கடைகளை 10 நாளில் அப்புறப்படுத்துவதாக நகராட்சித் தலைவர் உறுதி அளித்தார். உயர் அதிகாரிகளுடன் விவாதித்து சாதகமான முடிவை எடுப்பதாக கோட்ட மேலாளர் உறுதி அளித்து உள்ளார் என்றார் அழகிரி.
எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நகராட்சித் தலைவர் கெய்க்வாட்பாபு, உதவிக் கோட்ட மேலாளர் செல்வராஜ், ஆர்.வி.என்.எல். உதவிப் பொது மேலாளர் ரெட்டி, நெல்லிக்குப்பம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக