உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 24, 2010

அரசு மருத்துவமனையில் டாக்டர்கள்... பற்றாக்குறை!: சிதம்பரத்தில் நோயாளிகள் கடும் அவதி

சிதம்பரம்: 

                 சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மற்றும் மயக்க மருந்து பிரிவுகளுக்கு டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கவலையடைந்துள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை மையமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காமராஜ் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை திறக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது.  மாவட்ட மருத்துவமனைக்கு அடுத்த அந்தஸ்து என்பதால் எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு மற்றும் சித்தா என அனைத்து பிரிவுகளும் உள்ளன.

                       எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் சுமார் ஆயிரத்திற்கும் மேற் பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில் சிக்குன் குனியா நோய் தாக்குதலால் நோயாளிகளின் வரத்து 2000 தாண்டியுள்ளது. மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் மகப்பேறு மற்றும் பெண்களுக்கென தனி கட்டடம் மற்றும் நோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு 3 கோடி ரூபாய் செலவில் விஸ்தாரமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. எல்லா வசதிகள் இருந்தும் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு, தோல் நோய், நரம்பியல், மயக்க மருந்து பிரிவுகளுக்கு டாக் டர்களே இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் காட்டுமன்னார்கோவிலில் இருந்து மருத்துவர் வந்து செல்வதாக கூறப்படுகிறது. அவசரத்திற்கு அண்ணாமலைப் பல்கலை மருத்துவ கல்லூரியில் இருந்து அழைக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வரும் பிரசவ கேஸ்கள், முக்கிய விபத்து கேஸ்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.

                     தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் டாக்டர் பணியிடங்கள் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு காலி இடம் உள்ள பிரிவுகளுக்கு டாக்டர்கள் நியமிக்கப்பட்டால் சிதம்பரம் கிராம பகுதி மக்கள் அதிகம் பயனடைவார்கள். சிதம்பரம் மேம்பாலம் கட்டும்போது மருத்துவமனையின் மதிற்சுவர் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டப் படவில்லை. இதனால் மருத்துவமனை பாதுகாப்பின்றி திறந்த வெளி மைதானமாக உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் சுகாதாரமற்ற நிலையில் சேரும் சகதியுமாக உள்ளது. எனவே விரைவில் மதிற்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior