உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 28, 2010

'ஆன்-லைனில்' சமூக நலத்துறை திட்டங்கள் துவக்கிவைப்பு


                  சமூக நலத்துறையின் ஆறு திட்டங்களுக்கு, 'ஆன்-லைனில்' விண்ணப்பிக்கும் முறையை, அமைச்சர் கீதாஜீவன் நேற்று துவக்கி வைத்தார். அரசின் பல்வேறு துறைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை, 'ஆன்-லைன்' மூலம் வழங்கும் திட்டத்தை, தகவல் தொழில்நுட்பத்துறை உருவாக்கி வருகிறது. சமூக நலத் துறை வழங்கும் ஆறு திட்டங்களுக்கு, 'ஆன்-லைன்' மூலம் விண்ணப்பிக்கும் முறை நேற்று  துவக்கப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
 

 தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கூறியதாவது: 

               மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் விதவை மறுமண நிதி உதவித் திட்டம், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், தமிழ்நாடு அரசு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் ஆகிய ஆறு சேவைகள் 'ஆன்-லைன்' மூலம் வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நான்கு மாவட்டங்களில், 1,045 மக்கள் கணினி மையங்கள் உள்ளன.  பொதுமக்கள் இந்த மக்கள் கணினி மையங்களுக்குச் சென்று, 'ஆன்-லைன்' மூலம் சமூக நலத்துறை  திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
                 விண்ணப்பிக்கும்போது, முதலில் விண்ணப்பதாரரின் தகவல் கேட்கப்படும். அவருக்கு ஒரு 'கேன்'( சிட்டிசன் அக்சஸ் நம்பர்) எண் வழங்கப்படும். அதன்பின், அரசு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பத்துடன் ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், திருமண பத்திரிகை உட்பட தேவையான ஆவணங்களையும் இணைத்து அனுப்ப முடியும். இந்த விண்ணப்பங்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அனுப்பப்படும். பின், கள ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பிறகு விண்ணப்பம் கிராம வளர்ச்சி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோரிடம் அனுப்பப்பட்டு விண்ணப் பம் ஏற்கப்பட்டு, அத்தகவல் விண்ணப்பதாரருக்கு தெரிவிக் கப்படும். விண்ணப்பதாரர் எங் கும் அலைய வேண்டியதில்லை.
 
                விண்ணப்பதாரர் ஒவ்வொரு கட்டத்திலும், விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்ற விவரத்தை மக்கள் கணினி மையத்தில், 'கேன்' எண்ணை பயன்படுத்தி தெரிந்து கொள்ள முடியும். இரண்டு வாரங்களில் சிட்டா, பட்டா, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சேவைகள், 'ஆன்-லைனில்' வழங்கப்படும். அரசின் அனைத்து சேவைகளையும் மூன்று, நான்கு மாதங்களில் ஆன்-லைன் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பூங்கோதை கூறினார். 'மத்திய அரசு, அனைத்து குடிமகன்களுக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது வழங்கப்பட்டவுடன், தமிழக அரசின் சேவைகளைப் பெற 'கேன்' எண்ணிற்கு பதிலாக, பிரத்யேக அடையாள எண் பயன்படுத்தப்படும்' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior