தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை அருகில் திரண்டு சென்று கோஷம் போட்டு, தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர். இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் வெளியேற்றி, நாளை வரை சஸ்பெண்ட் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில்,
தி.மு.க., உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது,
'கடந்த ஆட்சியாளர்கள், என்னை மக்கள் மன்றத்தில் இருந்து ஒதுக்குவதற்காக என்னை விரட்டினர். அப்போது, ஒரு உன்னதமான தலைவர், தொண்டரை எப்படி அரவணைப்பாரோ, அதேபோல் என்னை இந்த இயக்கத்தில் இணைத்து கருணாநிதி அரவணைத்தார்' என்றார். உடனே, அ.தி.மு.க., உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர். செங்கோட்டையன் எழுந்து, ஒரு கருத்தை தெரிவித்ததும், அதை நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
அருண்மொழித்தேவனும், அரியும் கடும் கூச்சலிட்டு கோஷம் போட்டதும், அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். சபைக் காவலர்கள், சபைக்குள் நுழைந்து இருவரையும் வெளியேற்ற முயற்சித்தனர். அதற்குள், செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மற்ற உறுப்பினர்களும், பெண் உறுப்பினர்களும் சபாநாயகர் இருக்கை அருகே சென்று தரையில் உட்கார்ந்தனர். சபாநாயகர் ஆவுடையப்பன் சிரித்துக்கொண்டே, 'அமைதியாக உட்காருவதாக இருந்தால் உட்காருங்கள்' என்றார். இப்படிக் கூறியதும்,'ஒழிக' என்றும், 'நியாயம் வேண்டும்' என்றும் அ.தி.மு.க., உறுப்பினர்கள் கோஷம் போட்டனர். இதனால், சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு பக்கம், 20க்கும் மேற்பட்ட சபைக் காவலர்கள் இரு உறுப்பினர்களை வெளியேற்ற முயற்சி செய்து கொண்டிருக்க, மறுபக்கம் சபாநாயகர் இருக்கை அருகே அமர்ந்து மற்ற உறுப்பினர்கள் கோஷம் போட்டதால், சபையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை உருவானது. அந்த நேரம் பார்த்து, சபைக் காவலர்களின் பிடியில் இருந்து விடுபட்ட அருண்மொழித்தேவன், கோஷம் போட்ட உறுப்பினர்களுடன் நைசாக உட்கார்ந்து கொண்டார். இதைக் கவனித்த அமைச்சர் அன்பழகன், 'சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்ட உறுப்பினர்கள், சபையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் சபைக்குள்ளே இருந்து கோஷம் போடுகின்றனர். இதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது' என்றார்.
அதன்பின், 'சபைக் காவலர்கள் என்னுடைய உத்தரவை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், உங்களது கடமையை செய்யாதவர்களாகி விடுவீர்கள்' என சபாநாயகர் எச்சரித்தார். இதையடுத்து, சபைக்காவலர்கள் தங்கள் முழுபலத்தையும் பயன்படுத்தி, அருண்மொழித்தேவனையும், அரியையும் வெளியேற்ற முயன்றனர். அப்போது, அமைச்சர் அன்பழகன் குறுக்கிட்டு, 'அ.தி.மு.க., உறுப்பினர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு, தங்கள் கட்சி உறுப்பினர் பேசி முடித்து, அடுத்து தி.மு.க., உறுப்பினர் பேச ஆரம்பித்ததும், சபையை நடக்க விடாமல் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் பட்ஜெட் மீதான பொது விவாதம் வரை தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும்' என தீர்மானம் கொண்டு வந்தார்.
இதை குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றிய சபாநாயகர், 'அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபை மரபுகளை மதிக்காமல், திட்டமிட்டு தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். எனவே, இன்று (நேற்று) சபைக்கு வந்து இடையூறு செய்த அக்கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உட்பட அனைவரையும், வரும் 9ம் தேதி(நாளை) வரை நீக்கி வைக்கப்படுகின்றனர்' என்றார். இதையடுத்து, அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். காலை 11.47க்கு துவங்கிய அமளி 12.03க்கு ஓய்ந்தது.
எத்தனை பேர் நீக்கம்?:
சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர்கள் எண்ணிக்கை 57. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா, நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய மூன்று பேர் மட்டும் நேற்று சபைக்கு வரவில்லை. மற்ற 54 பேரும் சபைக்கு வந்ததாக, அக்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். 54 பேரில், 52 பேர் மட்டுமே, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் அ.தி.மு.க., உறுப்பினர்களாக இருந்தபோதும், நேற்று நடந்த அமளியில் அவர்கள் பங்கேற்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். இவர்கள் இருவரும் சபையில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
downlaod this page as pdf