உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 06, 2010

அன்னங்கோவில் முகத்துவாரத்திற்கு நிரந்தர தீர்வு எப்போது? 30 மீனவ கிராம மக்கள் எதிர்பார்ப்பு


பரங்கிப்பேட்டை:

             பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் முகத்துவாரத்திற்கு இதுவரை தீர்வு காணப்படாததால் அடிக்கடி தூர்ந்து விடுகிறது. இதனால் அந்த பகுதிகளைச் சேர்ந்த 30 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

                அன்னங்கோவில் வெள்ளாற்று வழியாக கடலுக்கு செல்ல முகத்துவாரம் உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையையொட்டிய சாமியார்பேட்டை, வேளங்கிராயன்பேட்டை, புதுக்குப்பம், கிள்ளை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க இந்த முகத்துவாரம் வழியாக படகில் கடலுக்கு சென்று வருகின்றனர். அடிக்கடி முகத்துவாரம் தூர்ந்து விடுவதால் கடலில் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர்.

                கடந்த 25 ஆண்டுகளாக அன்னங் கோவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தக் கோரி 30 கிராம மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. மீன் வளத்துறை அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை என மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலின் போது, 'உங்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள அன்னங்கோவில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி தருகிறோம்' என மீனவ கிராம மக்களிடம் அரசியல் கட்சியினர் ஆசை வார்த்தை கூறுவதோடு சரி, தேர்தல் முடிந்து விட்டால் அதுபற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.

               முகத்துவாரம் தூர்ந்து போகும் போது படகுகள் கடலுக்கு செல்ல முடியாததால் பரங்கிப்பேட்டை மற்றும் முடசல் ஓடை விசைப்படகு மீனவ சங்கத்தினர் படகு வைத்துள்ளவர்களிடம் பணம் வசூல் செய்து பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரி வருகின்றனர். சில மாதங்களில் மீண்டும் தூர்ந்து விடுவதால் மீனவர்கள் தொடர்ந்து பாதிக் கப்படுகின்றனர். முகத்துவாரம் தூர்ந்து சீராக தண் ணீர் ஓடிய நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன் புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்து பலியான துயர சம்பவம் நடந்துள்ளது.

                   அன்னங்கோவில் முகத்துவாரம் வழியாக 200க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு சென்று வருவதால் தினமும் சுமார் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மீன் வகைகள் கொள்முதல் செய்யப் பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சரிடம் புகார் செய்ததின் பேரில் கடந்த ஆறு மாதத்திற்கு முன் அமைச்சர் சாமி நேரடியாக அன்னங்கோவில் பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் சென்றார். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

                    மீன் வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் அன்னங்கோவில் முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்தியும், அன்னங்கோவில் பகுதியில் மீன் பிடி இறங்கு தளம் அமைத்துதர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டுள்ள மீனவ கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணைசேர்மன் செழியன் கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளார்.


பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior