சிதம்பரம் :
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரிஅம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனத்தின் போது ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபையின் எதிரில் கனக சபையில் நான்கு முறையும் நடக்கிறது. சித்திரை மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. மகா அபிஷேகத்தையொட்டி, உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில், நேற்று அதிகாலை முதல் மகா ருத்ரயாகம் நடந்தது. சபா கல்யாசபாபதி தீட்சதர் தலைமையில் 121 தீட்சதர்கள் 1,333 ஆவர்த்திகள் சொல்லி ருத்ர பாராயணம் செய்தனர். தொடர்ந்து காலை 8 மணியளவில் சித்சபையிலிருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் நடந்த ருத்ர ஹோமத்தில் 13 பேர் ஹோமம் செய்தனர்.மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரை நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் மகா அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக