எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 619 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் கிடைத்து, திருத்தப்பட்ட ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறையின் இணையதளம் மூலம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.மறு கூட்டல்-மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்களின் சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர் அதிகாரிகளிடம் தமிழக தேர்வுத் துறை சனிக்கிழமை வழங்கியது. இதையடுத்து திருத்தப்பட்ட ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இன்று கலந்தாய்வு தொடக்கம்:
மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர், அனைத்துப் பிரிவினரில் 200-க்கு 200 முதல் 200-க்கு 199.5 வரை கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்துள்ள 80 மாணவர்களுக்கு முதல் கட்ட எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது. மருத்துவப் பரிசோதனை காரணமாக மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்திலும், அனைத்துப் பிரிவினருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்திலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.மதிப்பெண் மாற்றம் காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் மாற்றம் பெற்றவர்களில் ஒரு மாணவர் மட்டும் முதல் நாளான திங்கள்கிழமை நடைபெறும் கலந்தாய்வு அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
சிறப்பிடம் பெற்ற 15 பேருக்கு...: இந்தக் கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 200-க்கு 200 பெற்று மொத்தம் 13 மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 200-க்கு 199.75 பெற்ற இரண்டு மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய அனுமதிக் கடிதத்தை சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை வழங்குகிறார்.
திருத்தப்பட்ட பி.இ. ரேங்க் பட்டியல்:
மறு கூட்டல்-மறு மதிப்பீடு மூலம் மதிப்பெண் மாற்றம் பெற்ற மாணவர்களுக்கு திருத்தப்பட்ட பி.இ. ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.annauniv.edu மூலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக