உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

சுயநிதிப் பள்ளிகள் கல்விக் கட்டணம்: நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை கல்விச் செயலருக்குக் கிடைக்கவில்லை

கடலூர்:

                  தமிழகத்தில் சுயநிதிப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு அளித்த அறிக்கை, கல்வித் துறை செயலருக்குக் கிடைக்கவில்லை என்ற விவரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

                 தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு, சுய நிதிப் பள்ளிகள் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு சுயநிதிப் பள்ளிகளும் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்களை அளித்து உள்ளது. இந்த விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலமாக, அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 

                நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைவிட, கல்வி நிறுவனங்கள் கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பதாக, ஏராளமாகப் புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதை எதிர்த்துப் பல போராட்டங்களும் நடந்து உள்ளன. இந்த நிலையில் சுயநிதிப் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு, அரசு கல்வித்துறைச் செயலருக்கு அனுப்பிய அறிக்கை விவரம் வேண்டி, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் 7-6-2010ல் மனு அனுப்பி இருந்தார். 

              இந்த மனுவுக்குப் பதில் அளித்து கல்வித்துறை சார்புச் செயலர் 17-6-2010ல் நிஜாமுதீனுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பள்ளிக் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் இருந்து அறிக்கை ஏதும் பெறப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனினும் தங்கள் மனு, தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவின் தனி அலுவலருக்கு, தகவல் வழங்கும் பொருட்டு மாற்றப்பட்டு உள்ளது என்றும் கடிதத்தில் சார்புச் செயலர் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலரிடம் இந்த அறிக்கை இல்லாத நிலையில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் குறித்து என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று நிஜாமுதீன் சனிக்கிழமை செய்திக் குறிப்பு ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior