கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் பேசுகிறார் முதல்வர் மு.கருணாநிதி. உடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முக
தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி 15 அறிவிப்புகள், புதிய திட்டங்களை வெளியிட்டார். அவையாவன:இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை. இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காக்கவும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010-ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசு சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.
இலங்கைப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு:
இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடிஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.
மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி 2006-ல் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு...
தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் முதல்வர் கருணாநிதி.
செம்மொழி மாநாடுகள் தொடரும்
உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும். மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும். மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
கோவை மாநகரில் ரூ.100 கோடியில் பாலம்
கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.100 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.காந்திபுரம் பகுதியில் பஸ் நிலையங்கள் உள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோவை மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே குறுக்குச் சாலை, நூறடிச் சாலை, சத்தியமங்கலம் சாலை ஆகியவற்றை கடக்கக் கூடிய சந்திப்புகளில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீளமுள்ள பெரிய மேம்பாலம் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் என்று நிறைவு விழாவில் முதல்வர் அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக