கடலூர்:
கடலூர் புனித வளனார் கல்லூரியில் நடைபெற்று வந்த திருவள்ளுவர் பல்கலைக் கழக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
கலைப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இக் கல்லூரியில் டிசம்பர் 22-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 160 ஆசிரிய ஆசிரியைகள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 19-ம் தேதி பல்லைக்கழகத்தில் நடைபெற்ற அகாடெமிக் கவுன்சில் தேர்வு தொடர்பாக, தனியார் கல்லூரி ஆசிரியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட துண்டறிக்கை ஆசிரியர்களிடையே திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. கடலூர் புனித வளனார் கல்லூரி முதல்வர் ரட்சகர் அடிகள் பெயரையும் துண்டுப் பிரசுரத்தில் இணைத்து இருந்தனராம். விடைத்தாள் திருத்தும் மையத்தில் துண்டறிக்கை வெளியிட்டதை முதல்வர் ரட்சகர் அடிகளும் கல்லூரியின் மற்ற ஆசிரியர்களும் கண்டித்தனர். இதில் எழுந்த பிரச்னை காரணமாக, கல்லூரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை திங்கள்கிழமை பிற்பகல் முதல் புறக்கணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து விசாரணை நடத்த வந்த பல்கலைக்கழகப் பதிவாளர் அமலதாஸிடம் தாங்கள் தொடர்ந்து, புனித வளனார் கல்லூரி மையத்தில் விடைத்தாள் திருத்த மாட்டோம், மையத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்து விட்டனர். ஆனால் விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்றக் கூடாது என்று புனித வளனார் கல்லூரி ஆசிரியர்கள் ரொசாரியோ உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர். துண்டறிக்கை வெளியிட்ட ஆசிரியை உஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுயநிதிக் கல்லூரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்பிரச்சினை காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. விடைத்தாள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கும் அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது.
புதன்கிழமை காலை அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக துணை வேந்தரைச் சந்தித்து மனு அளித்தனர். அதில் ஆசிரியர்களை இழிவாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை மாற்ற வேண்டும் என்றும் கோரி இருந்தனர். இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணை வேந்தர் விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக