உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

கலைமாமணி, தமிழ்மாமணி விருது கேள்விக்குறி! விருதாளர்கள் தேர்வு பணி முடக்கம்

                 கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகள் இந்தாண்டு காலத்தோடு வழங்கப்படுமா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது. புதுச்சேரி அரசின் கலை பண் பாட்டுத் துறை சார்பில் தமிழறிஞர்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் தமிழ்மாமணி, புதுச்சேரி கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
 
            இதுவரை  95 பேருக்கு தமிழ்மாமணி, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளுக்கான பரிசுத் தொகையும் கடந்தாண்டு உயர்த்தப்பட்டது. தமிழ்மாமணி விருதுக்கு 3 சவரன் தங்க நாணயம் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, கலைமாமணி விருதுக்கு 2 சவரன் தங்க நாணயம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
 
            இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான இரு குழுக்கள் ஒவ்வொரு ஆண்டும் கூடி தேர்வு செய்யும். கலைமாமணி தேர்வுக் குழுவின் பதவிக் காலம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து தேர்வுக் குழு தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறை அமைச்சர் தலைமையிலான இந்த குழுவில் கலை மற்றும் பண்பாடு சிறப்பு செயலர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
 
             மேலும், கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களான சித்தன் (எ)ராதாகிருஷ்ணன் (இலக்கியம்), பட்டாபிராமன்(இசை), முருகன் (நடனம்), காரை சுப்பையா (நாடகம்), முனுசாமி (சிற்பம்), கேசவசாமி (நாட்டுப்புற கலைகள்) ஆகியோரும் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவின் உறுப்பினர் செயலராக கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் செயல்படுவார்.
 
              ஏற்கனவே இருந்த தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிந்து, 4 மாதங்களுக்கு பிறகு காலதாமதமாக புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு பிறகு தேர்வுக் குழு கூடி, வந்துள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து விருதாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.இதுமட்டுமல்லாமல், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க நாணயங் களை முறைப்படி டெண்டர் வைத்த பிறகே வாங்க முடியும். இந்த நடைமுறைக்கு ஒரு மாத காலம் தேவைப் படும்.மேலும், அமைச்சக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட் டத்தாலும் விருதாளர்களை தேர்வு செய்யும் பணிகள் முடங்கி உள்ளன.
 
                    இதுபோன்ற காரணங்களால் கடந்த ஆண்டுக்கான (2008-09) கலைமாமணி விருதுகள் காலத்தோடு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்மாமணி விருதுக்கான தேர்வுக் குழு தற்போது செயல் பாட்டில்  உள்ளது.  இருந்தபோதும் கலைமாமணி விருதுடன் சேர்த்தே வழங் கப்படும் என்பதால் தமிழ்மாமணி விருது வழங்குவதும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior