உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 25, 2010

ரயில்வே பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள்

புதுடில்லி : 
              வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எட்டாவது ஆண்டாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதே போல், சரக்கு கட்டணத்திலும் மாற்றம் இல்லை. காலியாக உள்ள ரயில்வே இடங்களில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டுதல், ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் 10 ஆண்டுகளில் வீடு, ஆளில்லா லெவல் கிராசிங்குகளை ஒழிக்க மெகா திட்டம், இ-டிக்கெட் சர்வீஸ் கட்டணத்தில் வெட்டு, ஒரே ஆண்டில் ஆயிரம் கிலோ மீட்டருக்கு புதிய ரயில் பாதை திட்டம் என, ஏராளமான சலுகைகளையும் அறிவித்தார் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி. புற்றுநோய் சிகிச்சைக்கு இலவச பயணம், சினிமா தொழிலாளர்களுக்கு கட்டண சலுகை போன்றவையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

                   மத்திய அரசின் 2010-11ம் ஆண்டுக்கான, ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தாக்கல் செய்தார். பொருளாதார கண்ணோட்டம் மட்டுமல்லாது, சமூக கண்ணோட்டத்துடனும் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக கூறிய அவரின் உரையில், பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. பழைய கட்டணமே நீடிக்கும். தற்போது இ-டிக்கெட் முறையில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டில், பதிவு கட்டணம் என தனியாக வசூல் செய்யப்படுகிறது. இரண்டாம் வகுப்புக்கான பதிவுக் கட்டணம் ரூ.15 ஆக இருப்பது 10 ரூபாயாகவும், "ஏசி' வகுப்பு பதிவுக் கட்டணம் 40லிருந்து 20 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. புதிதாக 52 ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினருக் கான ரயில்வே வாரிய தேர்வு கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிதாக 94 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் நிலையங்களாக உயர்த்தப்படுகின்றன. 10 ரயில் நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக மாற்றப் படுகின்றன. 93 இடங்களில் பல்முனை வசதிகளுடன் கூடிய காம்ப்ளக்ஸ்கள் கட்டப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளே இல்லை என்ற நிலைமை உருவாக்கப்படும். இதற்கான மெகா திட்டம் செயல்படுத்தப்படும்.
வீடு: 

             மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் அனைவருக்கும் வீடு என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன்கீழ் அனைத்து ரயில்வே ஊழியர்களுக்கும் அடுத்த பத்தாண்டுகளுக்குள் வீடு கட்டித்தரப்படும். சிறப்பு சரக்கு போக்குவரத்து ரயில் இயக்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவர். சினிமா படப்பிடிப்புக்கு செல்லும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 75 சதவீதமும், "ஏசி' வகுப்பில் 50 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளது. புற்றுநோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக சென்றால், அவர்கள் இரண்டாம் வகுப்பு மற்றும் 3வது "ஏசி' வகுப்பில், இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களுடன் துணைக்கு செல்லும் ஒருவரும் கட்டணமின்றி பயணிக்கலாம். பத்திரிகையாளர்களின் மனைவியருக்கு 50 சதவீத கட்டணச் சலுகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இனி, மனைவி இல்லாமல் உள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் 18 வயது வரை உள்ள உறவினர்களுக்கும் 50 சதவீதம் கட்டணச் சலுகை அளிக்கப்படும். உள்ளூர் தேவைகளுக்காக அனுப்பப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு சரக்கு கட்டணம் ஒரு பெட்டிக்கு ரூ.100 வரை தள்ளுபடி செய்யப்படும். 

         இதுவரை போடப்பட்ட ரயில் பட்ஜெட்களிலேயே அதிக அளவு திட்ட மதிப்பீடாக ரூ.41 ஆயிரத்து 426 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு ரூ.4,441 கோடியும், பயணிகள் வசதிகளுக்கு என ரூ. 1,302 கோடியும், மெட்ரோ திட்டங்களுக்கு ரூ.1,001 கோடியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய ரயில் பாதைகள் அமைத்தல், துறைமுகங்களுக்கான ரயில்பாதை, உற்பத்தி நடவடிக்கைகள், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, பொதுத்துறை, தனியார் பங்களிப்பு மேம்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில்வே பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்

* பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை.

* புதிய ரயில் பாதைகளுக்கான ஒதுக்கீடு 1,302 கோடி ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒதுக்கீடு 923 கோடி ரூபாய்.

* 120 ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என, கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இவற்றில் 117 ரயில்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் இயக்கப்படும். அகல ரயில் பாதை இல்லாததால், மூன்று ரயில்களை மட்டும் இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

* 52 நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களும் மற்றும் 28 பயணிகள் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும்.

* 12 ரயில்களின் இயக்கம் அதிகரிக்கப் பட்டுள்ளது. 21 ரயில்கள் நீட்டிக்கப் பட்டுள்ளன.

* ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுவதால், பெண்கள், சீருடை அணிந்தவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

* இரண்டு அடுக்கு பெட்டி: டில்லி மற்றும் கோல்கட்டாவில் இருந்து இயக்கப்படும் தலா இரு ரயில்களில், இரண்டு அடுக்கு பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும்.

* 94 ரயில் நிலையங்கள் ஆதர்ஷ் நிலையங்களாக மேம்படுத்தப்படும். மேலும் 10 ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றப்படும்.

* ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் அனைத்திலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆட்கள் நியமிக்கப்படுவர்.

* இ-டிக்கெட்களுக்கான சேவை கட்டணம் குறைக்கப்படும். தூங்கும் வசதி பெட்டிகளுக்கு வாங்கும் இ-டிக்கெட் சர்வீஸ் கட்டணம் 10 ரூபாய் குறையும். "ஏசி' வகுப்பு இ-டிக்கெட் கட்டணம் 20 ரூபாய் குறையும் .

* மாவட்ட தலைநகரங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் அளவில் டிக்கெட் மையங்கள் திறக்கப்படும்.

* புற்றுநோயாளிகளுக்கும், அவர்களுடன் பாதுகாவலாய் பயணிக்கும் ஒரு நபருக்கும் 100 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கட்டண சலுகை.

* மூத்த குடிமக்கள் மற்றும் பெண் பயணிகளுக்கு உதவுவதற்காக, நவீன லக்கேஜ் டிராலிகள் அறிமுகப்படுத் தப்படும். இந்த டிராலிகளை, சீருடை அணிந்த உதவியாளர் கள் தள்ளிச் செல்ல ஏற்பாடு செய்யப்படும்.

* பயணிகளுக்கு சுத்தமான குடி தண்ணீரை மலிவான விலையில் வழங்க, ஆறு பாட்டிலிங் நிறுவனங்கள் துவக்கப்படும்.

* பெண் பயணிகளின் பாதுகாப்பிற்காக, ரயில்வே போலீஸ் படையில், 12 கம்பெனி பெண் போலீஸ் படையினர் உருவாக்கப்படும். இந்தப் படையினர், "மகிளா வாகினி' என அழைக்கப்படுவர். இதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

* உள்ளூர் மொழி: ரயில்வே வாரிய தேர்வுகளில் பங்கேற்கும் பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.

* மேலும், ரயில்வே வாரிய தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், இந்தி, உருது மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி, இனி உள்ளூர் மொழிகளிலும் கிடைக்கும்.

* உணவு தானியங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான கெரசின் போன்றவற்றுக்கு, சரக்கு கட்டணத்தில் சலுகை தரப்படும்.

* ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் அடுத்த 10 ஆண்டுகளில் வீடுகள் கட்டித் தரப்படும்.

* ரயில்வே ஊழியர்களுக்காக 522 மருத்துவமனைகள், 50 கேந்திரியா வித்யாலயாக்கள், 10 உறைவிடப் பள்ளிகள், மாதிரி கல்லூரிகள், தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் போன்றவை துவக்கப்படும். உபரியாக உள்ள ரயில்வே நிலங்களில் இவை துவக்கப்படும்.

* 2010-11ம் நிதியாண்டில், 94.4 கோடி டன் அளவுக்கு சரக்கு போக்குவரத்தை நடத்த இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டில் மாற்றி அமைக்கப் பட்ட இலக்கை விட 5.4 கோடி டன் அதிகம்.

* புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான ஒதுக்கீடு, தற்போதுள்ள 2,848 கோடிரூபாயிலிருந்து 4,411 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

* பொருளாதார மந்த நிலை நிலவினாலும், நடப்பு நிதியாண்டில் ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து இலக்கு நிர்ணயித்ததை விட 80 லட்சம் டன் அதிகரித்துள்ளது.

* சென்னையில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை நவீனப்படுத்தப்படும் மற்றும் புதிய பிரிவு ஒன்று துவக்கப்படும்.

* உ.பி., ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலைக்கான பணிகள், ஒரு ஆண்டிற்குள் துவக்கப்படும்.

* ரயில்வே பாதுகாப்புப் படையில் முன்னாள் ராணுவத்தினர் சேர்க்கப்படுவர்.

* அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரையும், வடக்கு அந்தமானின் திக்லிபூரையும் இணைக்கும் வகையில், அங்கு முதல் ரயில் பாதை அமைக்கப்படும்.

* டில்லி, செகந்திராபாத், கோல்கட்டா, சென்னை மற்றும் மும்பையில், விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு தரப்படும்.

* ராஷ்டிரிய சுவஸ்திய பீமா யோஜனா என்ற திட்டம், போர்ட்டர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்காக துவக்கப்படும்.

* செகந்திராபாத், பர்த்தாமன், கவுகாத்தி, புவனேஸ்வர் மற்றும் ஹால்டியாவில் சரக்கு பெட்டிகள் தொழிற் சாலை துவக்கப்படும்.
* சிக்கன நடவடிக்கை மூலம் 2,000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப் பட்டுள்ளது.

* ஒரு ரூபாய் வரவில் ஊழியர் செலவு 34 பைசா: உலகின் மிகப் பெரிய போக்குவரத்துத் துறையான இந்தியன் ரயில்வேயில், வருமானத்தில் கிடைக்கும் ஒரு ரூபாயில் ரயில்வே ஊழியர்களுக்கு சம்பளாக 34 பைசா ஒதுக்கப்படுகிறது. 

மத்திய ரயில்வேயின் 2010-11ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்:

* வருமானம்: *ரயில்வேயின் மொத்த வருமானத்தில் ஒரு ரூபாயில், 66 பைசா சரக்குப் போக்குவரத்தின் மூலம் கிடைக்கிறது. அதில் நிலக்கரி மூலம் 24 ஆயிரத்து 319 கோடி ரூபாயும்; சிமென்ட் மூலம் 5,600 கோடி ரூபாயும்; தானியங்கள் மூலம் 3,698 கோடி ரூபாயும்; உரங்கள் வகையில் 3,506 கோடி ரூபாயும்; பெட்ரோலியப் பொருட்கள் மூலம் 3,472 கோடி ரூபாயும்; கன்டெய்னர் சேவை மூலம் 3,025 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது.

* பயணிகள் கட்டணம் மூலம் ஒரு ரூபாயில் 27 பைசா வருமானம் கிடைக்கிறது.

* சரக்கு போக்குவரத்து அதிகரிப்பால், 2010-11ல், சரக்குப் போக்குவரத்து மூலம் 62 ஆயிரத்து 489 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது கடந்த நிதியாண்டை விட 6.4 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டில் இந்த வருமானம் 58 ஆயிரத்து 715 கோடி ரூபாயாக இருந்தது.

* பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பால் 2010-11ல் 26 ஆயிரத்து 126 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். இது கடந்த நிதியாண்டை விட 8.6 சதவீதம் அதிகம். கடந்த நிதியாண்டில் இந்த வருமானம் 24 ஆயிரத்து 57 கோடி ரூபாயாக இருந்தது.

* செலவு: * ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் சம்பளம் மற்றும் இதர சலுகைகளுக்கு ஒரு ரூபாயில் 34 பைசா செலவழிக்கப்படுகிறது.

* ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகளுக்காக 13 பைசா செலவாகிறது.

* எரிபொருளுக்காக மொத்த வருமானத்தில் 17 சதவீதம் செலவாகிறது.

* பங்கு ஆதாய தொகைக்காக 8 சதவீதம்; அரசுக்கு வழங்கப்படும் பங்காக 6 பைசா; குத்தகைச் செலவுகளுக்காக 4 பைசா; மூலதனப் பங்காக 4 பைசா வீதம் செலவாகிறது.

* ரயில்வேயின் வளர்ச்சி நிதிக்காக 2 பைசா செலவழிக்கப்படுகிறது.

* 52 நீண்ட தூர ரயில்களும் புதிதாக வருது: "இந்தியாவில் அமைந்துள்ள ரயில் நிலையங்களில், மேலும் 10 ரயில் நிலையங்கள், உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்படும்' என, மத்திய ரயில்வே பட்ஜெட்டில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அம்பாலா, போல்பூர், எர்ணாகுளம், ஜம்மு, சூரத் உட்பட 10 ரயில் நிலையங்கள் உலகத் தரத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளன. அதே போன்று சங்கனாச்சேரி, கூடூர், கொச்சுவேலி, ஜாம்நகர், சுல்தான்பூர், திருவாரூர், வயலார், ஹிம்மத் நகர், ஜக்தீஸ்பூர் உட்பட 94 ரயில் நிலையங்கள் மாதிரி (ஆதர்ஷ்) ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளன. மகளிர் சிறப்பு ரயில்கள், "மாத்ரபூமி சிறப்பு ரயில்' என பெயர் மாற்றப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில், முன்பதிவு இல்லாத மூன்று, "கரம்பூமி' ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. பாமர மக்களுக்கு பயன்படும் ரயில்கள் இவை. ஹவுரா - காட்பாடி, புவனேஸ்வர் வழியாக புதுச்சேரி எக்ஸ்பிரஸ், ஹல்தியா - சென்னை எக்ஸ்பிரஸ்(வாரம்), மதுரை - ஓசூர் வழியாக நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வாரம்), மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை ), பன்வல் வழியாக, புனே - எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் (வாரம் இருமுறை), சேலம் வழியாக, கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரம் மூன்று முறை), மதுரை - திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரம் இருமுறை) உட்பட 52 புதிய நீண்ட தூர ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

* காமன்வெல்த் போட்டிக்காக சிறப்பு ரயில்: "இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடப்பதன் அடையாளமாக, அதற்கென, "சிறப்பு கண்காட்சி ரயில்' நாடு முழுவதும் இயக்கப்படும்' என, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தெரிவித்தார். மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதாவது: டில்லியில், வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகளை இந்தியா நடத்துவதன் அடையாளமாகவும், இது குறித்த தகவல்களை பரப்பவும், "காமன்வெல்த் கண்காட்சி ரயில்' துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக, சென்னை, செகந்திராபாத், டில்லி மற்றும் மும்பை உட்பட ஐந்து இடங்களில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விளையாட்டு வீரர்களுக்கு, ரயில்வேயில் அதிகளவு வேலை வாய்ப்பு சலுகைகள் அளிக்கப்படும். இவ்வாறு மம்தா கூறினார்.

அகலப்பாதை மாற்றம் எங்கே? 2010ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் 

அகலப் பாதை மாற்ற திட்டங்கள்:

* தஞ்சை - விழுப்புரம் பாதையில் உள்ள கடலூர் - சீர்காழி பகுதி

* வேலூர் - விழுப்புரம் * தென்காசி - விருதுநகர்

2010-11ம் ஆண்டுக்குள் நிறைவேறும் மாற்ற திட்டங்கள்

* திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு பாதையில் உள்ள திண்டுக்கல் - பழநி பகுதி.

2010ம் ஆண்டுக்குள் நிறைவேறும் புதிய ரயில்தடம்

நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி

2010-11ம் ஆண்டுக்குள் நிறைவேறும் புதிய ரயில்தடம்:

*சேலம் - நாமக்கல் * நாகூர் - காரைக்கால்

இந்த புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரயில் தடம்: எதுவும் இல்லை. ஆனால், நீடாமங்கலம் - மன்னார் குடி பாதை அமைக்கும் பணி எடுத்துக்கொள்ளப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு புதிய ரயில்கள்

புறநகர் ரயில்கள்

* சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை - சென்னை கடற்கரை,

* சென்னை கடற்கரை - திருத்தணி - சென்னை சென்ட்ரல்,

* சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் - சென்னை சென்ட்ரல்.

* வேளச்சேரி - செயின்ட் தாமஸ் மவுன்ட் வரையிலான பாதை வரும் 2012ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற திட்டம்.

நீண்டதூர ரயில்கள் அறிமுகம்

1. அவுரா - காட்பாடி-புதுச்சேரி எக்ஸ்பிரஸ். வழி புவனேஸ்வர் (வாரம் ஒருமுறை)

2. நாகர்கோவில் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை) வழி மதுரை - ஓசூர்

3. மங்களூரு - திருச்சி எக்ஸ்பிரஸ் ( வாரம் ஒரு முறை)

4. கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ( வாரம் மூன்று முறை) வழி சேலம்.

5.மதுரை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ( வாரம் இரு முறை)

6. ஹால்தியா - சென்னை( வாரம் ஒரு முறை)

பயணிகள் ரயில்

திருச்செந்தூர் - திருநெல்வேலி பாசஞ்சர்

மயிலாடுதுறை - தஞ்சாவூர் பாசஞ்சர்

கோவை - பொள்ளாச்சி பாசஞ்சர்

புனித யாத்திரை ரயில்கள்

1. அவுரா - சென்னை - புதுச்சேரி - மதுரை - ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - பெங்களூரு - சென்னை - அவுரா.

2. போபால் - துவாரகா - காஞ்சிபுரம் - ராமேஸ்வரம் - மதுரை - கன்னியாகுமரி - திருவனந்தபுரம் - கொச்சி - போபால்.

3. மதுரை - சென்னை - கோபர்கன் - மந்திராலயம் - சென்னை - மதுரை.

4. மதுரை - ஈரோடு - புனே - உஜ்ஜயினி - வேரவேல் - நாசிக் - ஐதராபாத் - சென்னை - மதுரை.

5. மதுரை - சென்னை - ஜெய்ப்பூர் - டில்லி - மதுரா - பிருந்தாவன் - அலகாபாத் - வாரணாசி - கயா - சென்னை - மதுரை.

6.மதுரை - வாரணாசி - கயா - பாட்னாசாகிப் - அலகாபாத் - அரித்துவார் - சண்டிகார் - குருஷேத்ரா - அமிர்தசரஸ் - டில்லி - மதுரை.

7.மதுரை - மைசூரு - கோவா - மும்பை - அவுரங்காபாத் - ஐதராபாத் - மதுரை.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior