உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 10, 2010

ரூ.20 கோடி உளுந்து சாகுபடிக்கு தண்ணீர் தேவை


நீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும் வீராணம் ஏரி.
 
கடலூர்:
 
                 கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து 2 அடி தண்ணீர் திறந்துவிட்டால் ரூ.20 கோடி உளுந்து உற்பத்தி கிடைக்கும்.கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள், காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை குறுவை நெல் சாகுபடியும், அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை சம்பா நெல் சாகுபடியும் நடைபெற்று வந்தது. ஆழ்குழாய் கிணற்றுப்பாசனம் மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரி டெல்டா பகுதிகளில் நவரைப்பட்ட சாகுபடி நடக்கிறது. 2002-க்கு முன்பு வரை கோடைக் காலத்தில் வீராணம் ஏரி வறண்டு கிடப்பதுதான் வாடிக்கை. சென்னைக்குக் குடிநீர் கொண்டு போவதற்காக வீராணம் ஏரியின் கொள்ளளவு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஒருமுறை நிரப்பினால் சென்னைக்கு ஒரு மாதம் தண்ணீர் அனுப்ப முடியும்.வீராணம் ஏரியின் நீர் மட்டம் வியாழக்கிழமை வரை 42 அடியாக இருந்தது (மொத்த உயரம் 47.5 அடி). மழை காரணமாக மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, சனிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 42.8 அடியாக உயர்ந்து உள்ளது. ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.கோடைக் காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து 2 அடி நீர் மட்டும் (சுமார் 0.25 டி.எம்.சி.) கொடுத்தால் போதும், குறைந்தது 1 லட்சம் ஏக்கரில் நேரடி உளுந்து சாகுபடி செய்ய முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.குறுவை சாகுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டபின், ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வருவாய் கிடைக்கும் நேரடி உளுந்து விதைப்பு விவசாயத்தை, வேளாண் துறை அறிமுகப்படுத்தி இருந்தால், வீராணத்தில் தண்ணீர் இருந்தும் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் இப்படி தரிசாகக் கிடக்கத் தேவையில்லை என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.இது குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், கோடைக் காலத்தில் வீராணம் ஏரிக்கு தண்ணீர் உறுதி செய்யப்பட்டு இருப்பதால், மார்ச் முதல் மே மாதம் வரை நேரடி உளுந்து விதைப்பு செய்தால், மிகக் குறைந்த செலவில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும். 1  லட்சம் ஏக்கருக்குக் கணக்கிட்டால் ரூ.20 கோடி மதிப்பிலான உளுந்து கிடைக்கும். இதற்கு வீராணம் ஏரியில் இருந்து 2 அடி தண்ணீர் திறந்தால் போதும்.   மேட்டூர் அணை நீர்மட்டம் தற்போது 73.23 அடியாக உள்ளது. இதில் இருந்து 2 அடி தண்ணீர் ஆண்டுதோறும் திறந்துவிட்டால் போதும். டெல்டா பகுதிகளில் உளுந்து, பயறு வகைகள் உற்பத்தி மூலம் தமிழகத்தின் விவசாயத்தை தலைநிமிரச் செய்யமுடியும் என்றார் ரவீந்திரன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior