சிதம்பரம்:
தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை மதியம் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் கடலோரப் பகுதியான சிதம்பரத்தை அடுத்த கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கிள்ளை பேரூராட்சித் தலைவர், போலீஸôர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர். பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் கடலோரப் பகுதியில் உள்ள உப்பனாற்றில் உள்ள சுரபுண்ணை காடுகளை தினந்தோறும் படகுகள் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தமிழக அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. கிள்ளை பகுதியில் உள்ள கடலோர 7 கிராமங்களில் சுனாமி எச்சரிக்கை அபாயசங்கு 2.43 மணி ஊதப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டது. கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் சுற்றுலா அலுவலர் ஹரிஹரன் ஆகியோர் தனி மோட்டார் படகில் சென்று படகில் சுற்றிப் பார்க்க சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் மீனவர்களை உடனடியாக கரைக்கு அழைத்து வந்து அப்பகுதியிலிருந்து வெளியேற்றி அனுப்பி வைத்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து அவசர, அவசரமாக பதற்றத்துடன் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மேலும் படகு சவாரி செய்ய முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளுக்கு தொகை திருப்பி தரப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் தி.சுப்பிரமணியன் மற்றும் போலீஸôர் அப்பகுதிக்கு சென்று சிறப்பு பேரூந்துகளை வரவழைத்து சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால் கிள்ளை, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை பல்வேறு கடலோரப் பகுதிகளில் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பெரும் பரபரப்பாக இருந்தது.
கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு அப்பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும் கிள்ளை பகுதியிலிருந்து கடலுக்குள் 9 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர் என பேரூராட்சி தலைவர் கிள்ளை எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக