சிதம்பரம்:
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கடல் உணவு வகை மீனான கொடுவா மீன் வளர்ப்பு மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அதிக லாபம் பெறலாம். புரதச்சத்து அதிகம் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது கொடுவா மீன். நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு நோயை தடுக்கவல்லது என அண்ணாமலைப் பல்கலை. கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த அரிய வகை மீன்களை உப்புநீரில் மட்டும் வளர்க்கப்பட்டது. தற்போது நல்ல நீரில் வளர்க்கலாம் என ராஜீவ்காந்தி நீர் வாழ் உயிரின வளர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு கடல்பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் கொடுவா மீன் வளர்ப்பு குறித்து மீன் வளர்ப்போருக்கு பயிற்சியை அளித்து வருகிறது.
மீன்வளர்ப்பு முறை:
கொடுவா மீன் குஞ்சுகளை பண்ணைகளுக்கு எடுத்துச் சென்று முதலில் நாற்றங்கால் குளம் அல்லது வளர்ப்பு குளத்தில் கட்டப்பட்டுள்ள 1ல1ல1 மீட்டர் (அல்லது) 2ல2ல1.5 மீட்டர் அளவிலான ஹாப்பாவில் (நைலான்வலை) ஆயிரம் மீன் குஞ்சுகள் என்ற எண்ணிக்கையில் இருப்பு செய்து 30 முதல் 40 நாள்கள் வரை வளர்க்க வேண்டும்.
மீன் குஞ்சுகளுக்கு உணவிடும் முறை:
மீன் குஞ்சுகளுக்கு பொருத்தமான வகையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவை ஒரு நாளைக்கு காலை, மாலையில் அளிக்க வேண்டும். தீவனத்தை உணவாக கொடுக்கும்போது முதல் வாரத்தில் மீன்குஞ்சுகளின் எடையில் 20-30 சதவீத அளவுக்கு உணவளிக்க வேண்டும். மேற்கண்ட அளவினை வாரத்துக்கு ஒருமுறை படிப்படியாக குறைத்து கடைசியில் மீன் குஞ்சுகளின் எடையில் 2 சதவீதம் என்ற அளவில் உணவின் அளவை மாற்றி கொடுக்க வேண்டும்.
நீர்மாற்றம்:
தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொருத்தும் குளத்து நீரின் தரத்தை பொருத்தும் தேவைக்கேற்ப (20-30 சதவீதம்) நீர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
ஹாப்பா வலைகளை பரிசோதித்தல்:
காற்றோட்ட வசதிக்காகவும், குளநீர் சுழற்சிக்காகவும் தினமும் ஹாப்பா வலைகளை சோதனை செய்ய வேண்டும்.
தரம்பிரித்தல் பிரித்தல்:
கொடுவா மீன் குஞ்சு ஒன்றுக் கொன்று பகமைக்குணம் கொண்டவை. தன் இனத்தை தானே உண்ணும் பழக்கம் உடையது. சிறியளவு மீன்குஞ்சுகளை பெரிய அளவுள்ள மீன்குஞ்சுகள் பிடித்து உண்ணும். ஆதலால் தரம் வாரியாக பெரிய, சிறிய குஞ்சுகளை தனித்தனி வலைகளில் பிரித்து வைப்பதன் மூலம் இதை தடுக்கலாம். கொடுவா மீன் ஒருமாதத்துக்குள் 4 முதல் 5 செ.மீ வரை வளரும். ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் மீன்குஞ்சுகள் என்ற எண்ணிக்கையில் இருப்பு செய்ய வேண்டும்.
பராமரிக்கும் முறைகள்:
மீன்குஞ்சுகளை மிருதுவான நூலால் செய்யப்பட்ட வலை, வடித் தட்டுகள் கொண்டு பிடித்து மாற்ற வேண்டும். குஞ்சுகளை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் அதாவது நீந்தும் முறை பிராணவாயு குறைபாட்டினால் முக்கியமாக அதிகாலை வேளையில் நீரின் மேல்புறம் வந்து சுவாசிக்கும் என்பதால் கண்காணிக்க வேண்டும். குளத்தில் மீன்குஞ்சுகளுக்கு ஊறுவிளைவிக்கும் மீன்களோ நண்டுகளோ இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய 10 முதல் 15 செ.மீ. அளவுள்ள மீன்குஞ்சுகளை கூண்டு வளர்ப்பு முறையில் வளர்த்து வந்தால் 80 முதல் 85 சதவீதம் வரை பிழைப்புத் திறன் பெற்று நல்ல பலன் கிடைக்கும். வெளிநாடுகள் இந்த மீன்களை வாங்க தயாராக உள்ளது என மத்திய அரசு கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய உதவி இயக்குநர் முனைவர் எஸ்.கந்தன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக