உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 25, 2010

தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம் பாடப் புத்தகங்கள் விநியோகம் தொடக்கம்


கடலூர்:
 
                      தமிழகம் முழுவதும் அஞ்சல் நிலையங்கள் மூலம், பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை தமிழக அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒரு கல்வி மாவட்டத்துக்கு ஒரு மையம் வீதம் தேர்வு செய்து, அவற்றுக்குத் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு, பள்ளிகள் நேரடியாக அந்த மையங்களுக்கு வந்து பாடப்புத்தகங்களை வாங்கிச் செல்லும் முறை, கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. புத்தகங்களைப் பெற்றுச் செல்ல பள்ளிகளில் போதிய ஆள்கள் இல்லாமை, வாகன வசதிக்குறைவு போன்ற காரணங்களால் இந்த முறையில் பிரச்னைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.எனவே பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களை விநியோகிக்க, இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது. 
 
                     அதன்படி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை கொண்டு சென்று, வழங்கும் பொறுப்பை அஞ்சல் நிலையங்கள் ஏற்றுக் கொண்டு உள்ளன.அதன்படி பள்ளிகளின் பாடப் புத்தகங்கள் தேவை, அந்தந்த மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்குகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அஞ்சலக அதிகாரிகள் வந்து, பாடப் புத்தகங்களைப் பெற்றுச் சென்று, பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் கொண்டுபோய் ஒப்படைத்து விடுவார்கள். தலைமை ஆசிரியர்கள் மே இறுதிக்குள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடப் புத்தகங்களை வழங்குவர். ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் போது அனைத்து மாணவர்களிடமும் பாடப்புத்தகங்கள் இருக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
                     இதன்படி கடலூர் மாவட்டத்துக்கு, 5 லட்சம் பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. இவைகள் கடலூர் செல்லங்குப்பத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவன சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன. புதன்கிழமை பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் தொடங்கியது. அஞ்சல் துறை அதிகாரிகள் வந்து பெற்றுச் சென்றனர்.பாடப் புத்தகங்கள் விநியோகத்தை கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி தொடங்கி வைத்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior