கிள்ளை: 
                    சிதம்பரம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நாகை மாவட்டம் கொடியம்பாளையத்திற்கு முதல் முறையாக மினி பஸ் இயக்கப்பட்டது.
                     சிதம்பரத்தில் இருந்து 20கி.மீ., தொலைவில் நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் கொடியம்பாளையம் மீனவ கிராமம் உள்ளது. இங்கு 420 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பிடிக்கும் மீன், நண்டு, இறால் வகைகளை நகர பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய சாலை வசதி இன்றி அவதிப்பட்டு வந்தனர்.
 
                    கடந்த சுனாமியின் போது கிராமத்தை பார்வையிட வந்த அதிகாரிகளை மீனவர்கள் முற்றுகையிட்டு கொடியம்பாளையம் உப்பனாற்றில் பாலம் கட்டி, தெற்கு பிச்சாவரம், திருவாசலடி வழியாக சிதம்பரம் செல்லும் சாலையை சரி செய்து அகலப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனையேற்று ஆசியன் வளர்ச்சி வங்கி உதவியுடன் சுனாமி நிதி (2008-2009) 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நெடுஞ்சாலை துறை மூலம் உப்பனாற்றில் பாலம் கட்டப்பட்டது. அதனை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவிலில் நடந்த அரசு விழாவில் துணை முதல் வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
 
                        தற்போது சிதம்பரத்தில் இருந்து மாரியப்பா நகர், சிவபுரி, குயவன் பேட்டை, அம்பிகாபுரம், கீழப்பெரம்பை, இளந்திரிமேடு 20 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முதல் முறையாக மினி பஸ் இயக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனால் அப்பகுதி மீனர்வகள் தொழிலுக்கு செல்லாமல் கிராமத்தில் இருந்தனர். சிதம்பரத்தில் இருந்து சென்ற மினி பஸ்சை கிராம தலைவர்கள் கோவிந்தசாமி, குமணன், பொன்னுசாமி, கடல் மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ரவிச்சந்திரன், மகாலட்சுமி, ஊராட்சி துணை தலைவர் தனபால் முன்னிலையில், ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் கொடியசைத்து பஸ்சை இயக்கி வைத்தார்.
                         சிதம்பரத்தில் இருந்து முதல் முறையாக இயக்கப்பட்ட இந்த பஸ்சை கொடியம்பாளையம் எல் லையில் இருந்து கிராம மக்கள் வாண வேடிக்கை, வாத்தியங்கள் முழங்க ஊருக்குள் அழைத்து சென்றனர்.மேலும் சிதம்பரம், சீர்காழியில் இருந்து கொடியம்பாளையத்திற்கு அரசு பஸ் இயக்க கோரி போக்குவரத்து துறை அமைச்சருக்கு கிராமத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக