உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சாம்பியன்


  
       இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. மூன்றாவது ஐபிஎல் இறுதி ஆட்டம் மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

               இரு அணிகளிலும் அரையிறுதியில் விளையாடிய வீரர்களே இறுதிப் போட்டியிலும் விளையாடினர். காயம் காரணமாக அணியில் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற சந்தேகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சச்சின். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் பீல்டிங்கிலும் பேட்டிங்கிலும் அசத்தினார் அவர். சென்னை அணியின் ஹேடனும், முரளி விஜய்யும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஸ்கோரை உயர்த்தி வந்தனர். 8வது ஓவரின்போது பெர்னாண்டோ பந்தில் திவாரியிடம் கேட்ச் கொடுத்து விஜய் அவுட்டானார். அவர் 19 பந்துகளில் 26 ரன்களைச் சேர்த்தார். அவரது ஸ்கோரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி அடங்கும்.

           அதற்கு அடுத்த ஓவரிலேயே ஹேடன் அவுட்டானார். அவர் 31 பந்துகளைச் சந்தித்து வெறும் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அதிக பந்துகளை வீணாக்கினார். அதன்பிறகு ரெய்னாவும் பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்து 20 ரன்கள் சேர்த்திருந்தபோது பத்ரிநாத் அவுட்டானார். அவர் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். கேப்டன் தோனி 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். மோர்கெல் 15 ரன்களில் ரன் அவுட்டானார். அனிருதா ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்தார். 
                 ரெய்னா அபாரம்: சுரேஷ் ரெய்னா 57 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவர் இரண்டு முறை தந்த காட்சை மும்பை அணியினர் கோட்டை விட்டனர்.  மும்பை தரப்பில் பெர்னாண்டோ 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜாகீர் கான், பொல்லார்டு தலா ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.
             
                சென்னை வீரர் அஸ்வின் வீசிய முதல் ஓவரில் யாரும் ரன் எடுக்கவில்லை. இரண்டாவது ஓவரில் தவாண் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் டெண்டுல்கரும், அபிஷேக் நய்யாரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் ஜோடி சேர்ந்து 67 ரன்கள் எடுத்தனர். நய்யார் 27 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே ஒரு ரன் எடுத்திருந்த ஹர்பஜன் அவுட்டானார். பின்னர் சச்சினும் ராயுடுவும் ஜோடி சேர்ந்து 26 ரன்கள் சேர்த்தனர். ஜகதி வீசிய பந்தை சச்சின் தூக்கியடிக்க பந்து விஜய் கையில் சிக்கியது. இதனால் 48 ரன்கள் எடுத்திருந்த சச்சின் அவுட்டானார். இதன் பிறகே ஆட்டத்தின் போக்கு மாறியது. அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்திலேயே அடுத்தடுத்து அவுட்டாயினர். பொல்லார்டு 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜகதி 2 விக்கெட்டுகள் எடுத்தார். போலிங்கர், மோர்கெல், ரெய்னா, முரளிதரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னா தேர்வானார்.

சுருக்கமான ஸ்கோர்: 
 
            சென்னை 168-5 (சுரேஷ் ரெய்னா 57*, முரளி விஜய், 26, தோனி 22, பெர்னாண்டோ 2-23); மும்பை 146-9 (சச்சின் 48, அபிஷேக் நய்யார் 27, பொல்லார்டு 27, ஜகதி 2-26). முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு நிறைவு விழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தான் இசையமைத்து பாடிய லகான் படத்திலிருந்து சலோ சலோ, வந்தே மாதரம் மற்றும் ஜெய் ஹோ ஆகிய பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாலிவுட்டைச் சேர்ந்த பிபாஷ பாசு, ஷாஹித் கபூர் ஆகியோர் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினர். அப்போது அரங்கில் சுமார் 55 ஆயிரம் பேர் குழுமியிருந்தனர். நிகழ்ச்சியில் ஐபிஎல் ஆணையர் லலித் மோடி பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சசாங் மனோகர், செயலர் என்.ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior