உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 26, 2010

திருவதிகை கோயிலில் உழவாரப் பணி

 பண்ருட்டி:

             சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றத்தினர், தங்களின் 99-வது உழவாரப் பணியை பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை செய்தனர். இவ்வமைப்பைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உழவாரப் பணி தொண்டர்கள் கோயில் மின் இணைப்புகளை சரி செய்தல், சுவர்களை சுத்தம் செய்து வெள்ளை அடித்து ஆன்மிக வாசகங்களை எழுதுவது, புல், பூண்டு புதர்களை அகற்றுதல், உற்சவ மூர்த்திகள் மற்றும் பூஜை பொருள்களை சுத்தம் செய்தல்,திருக்குளத்தை தூய்மை செய்தல், சுவாமி துணிகளை சலவை செய்தல் உள்ளிட்ட பல வேலைகளை செய்து, கோயில் வளாகத்தை புதுப்பொலிவாக்கினர்.

 இது குறித்து அவ்வமைப்பைச் சேர்ந்த பி.சீனிவாசன், டி.சரவணன் ஆகியோர்  கூறியது:

               இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைப்பணி மன்றம் 2001-ம் ஆண்டு 15 அடியார்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது இந்த அமைப்பில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 600-ம் மேற்பட்ட அடியார்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் கோயிலில் முற்றோதலும், இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் பல ஆண்டுகளாக பூட்டியுள்ள கோயில்களை தேர்வு செய்து உழவாரப் பணி செய்தல், 3-வது ஞாயிற்றுக்கிழமை தாம்பரம் கோதண்டராமர் ஆலயத்தில் பன்னிருதிருமுறை பாராயணம் செய்தல், 4-வது ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதியில் உள்ள கோயில்களில் உழவாரப் பணி மேற்கொள்ளுதல் என திட்டமிட்டு செயல்படுகிறோம். பழமையும், வரலாற்று பெருமையும் கொண்ட சிதலம் அடைந்த இந்து கோயில்களை தேர்வு செய்து உழவாரப் பணி செய்து வருகிறோம். இதனால் சில கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது.

                 பூட்டி கிடந்த சில கோயில்கள் திறக்கப்பட்டு கால பூஜைகள் முறைப்படி நடக்கின்றன. எங்கள் அமைப்பின் 99-வது உழவாரப் பணியை அப்பர் பெருமான் உழவாரப் பணி செய்த திருவதிகையில் செய்ய விரும்பி வந்துள்ளோம். உழவாரப் பணிக்கு தேவையான கருவிகள் மற்றும் அடியார்களுக்கு உணவு சமைக்க தேவையான அனைத்து பொருள்களும் நாங்களே எடுத்து வந்து விடுவோம் என கூறினர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior