கடலூர் :
கடலூர் - விருத்தாசலம் சாலையில் முன் அறிவிப்பின்றி போக்குவரத்தை மாற்றம் செய்ததால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவ, மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கடலூர் - விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பச்சையாங்குப்பத்தில் பாலத்தின் முடிவு பகுதியின் இரண்டு பக்கமும் சாலையின் நடுவில் மணல் கொட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் முன்னறிவிப்பின்றி மாற்றி விடப்பட்டுள்ளது. அதன்படி கடலூரில் இருந்து செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலை வழியாக சென்று ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி சாலையை அடைகிறது.
அதே போல் விருத்தாசலம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் அதே வழியாக சிதம்பரம் சாலைக்கு திருப்பிவிடப்பட்டு கடலூர் வருகிறது. காரைக்காடு வழியாக சில பஸ்கள் இயங்குகின்றன. இதனால் குள்ளஞ்சாவடியில் இருந்து முதுநகர் வரையுள்ள தொண்டமாநத்தம், சுப்ரமணியபுரம், சேடப்பாளையம், அன்னவல்லி, கண்ணாரப் பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னறிவிப்பின்றி சாலை திடீரென அடைக்கப்பட்டதால் ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லமுடியாமல் வீடு திரும்பினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக