கடலூர்:
போபால் விஷவாயுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்து, கடலூர் பொதுநல அமைப்புகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 11) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
போபால் விஷவாயுப் பேரழிவு தொடர்பான வழக்கின் தீர்ப்பு 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்டு உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதாரணத் தண்டனையாக 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 20 ஆயிரம் பேரின் உயிரைப் பலிவாங்கிய, பல்லாயிரம் பேரைப் பாதிப்புக்கு உள்ளாக்கிய இந்த விபத்தில், வழங்கப்பட்டு இருக்கும் தீர்ப்பு ஏற்புடையது அல்ல.கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கடலூர் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள், மேலும் பொறுப்பற்ற நிலையில் செயல்பட இந்த் தீர்ப்பு வழிவகுக்கும். எனவே போபால் பேரழிவு தீர்ப்பைக் கண்டித்து 11-ம் தேதி காலை 10 மணிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணங்களுக்கு மாறாக, அதிக கட்டணம் வசூலிக்கும் கடலூர் கல்வி நிறுவனங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூரில் 15- ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடலூர் லாரன்ஸ் சாலையில் சுரங்கப்பாதை அமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் காரணமாக இருந்த மாவட்ட ஆட்சியர், நகராட்சித் தலைவர், சட்டப் பேரவை, மக்களை உறுப்பினர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகச் செயலர் எம்.நிஜாமுதீன் முன்னிலை வகித்தார். பொதுநல அமைபுகளின் பிரதிநிதிகள் வெண்புறா குமார், வழக்கறிஞர் திருமார்பன், சி.ஏ.தாஸ், செல்வ. ஏழுமலை, ஜெயராமன், மணிவண்ணன், பரிதிவாணன், நடராஜன், செந்தில்வேலன், ஜெகதீசன், கலியபெருமாள், பாலமுருகன், மோகனாம்பாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக