உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

என்.எல்.சி.யில் பண்ருட்டி எம்.எல்.ஏ தி.வேல்முருகன் உண்ணாவிரதம்


நெய்வேலி:
 
                என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடர்ந்தது. இந்த உண்ணாவிரதத்தில் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகனும் ஈடுபட்டுள்ளார்.
 
                    என்எல்சி நிறுவனத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி நிரந்தரத்துக்கான சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி பாட்டாளி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 3-ம் நாளான புதன்கிழமை வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தோரில் 8 பேர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக என்எல்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதையடுத்து புதன்கிழமை உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்த பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசுகையில், 
 
                        "6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தியபோது, 2 மாதங்களுக்குள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக கூறிய நிர்வாகம் 6 மாதமாகியும் நிறைவேற்றவில்லை. 48 மணிநேரம் கெடு விதிக்கிறோம். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் என்எல்சி தலைவரின் வீடு முற்றுகையிடப்படுவதோடு, இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்படும், மேலும் பாமக தொழிற்சங்கமும் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காது. எங்களை வன்முறைக்குத் தூண்ட வேண்டாம். ஜனநாயக முறையிலே வேண்டுகோள் வைக்கிறோம். கோரிக்கைக் குறித்து நிரந்தரத் தீர்வு ஏற்படும்வரை நானும் உண்ணாவிரத்தில் பங்கேற்கவுள்ளேன். என்எல்சி நிர்வாகத்தினர் மக்கள் பிரதிநிதிகளை மதித்து நடக்க வேண்டும்' என்றார் வேல்முருகன். 
 
'உச்ச நீதிமன்றம் திறந்த பிறகுதான் பிரச்னைக்கு தீர்வு' 
 
                         என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் படிப்படியாக இணைப்பது என நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்கோ-சர்வ் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக இதே பிரிவில் உள்ள மற்றொரு தொழிற்சங்கம், உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடுத்திருப்பதால், ஒப்பந்தத் தொழிலாளர்களை இன்கோ-சர்வ் பிரிவில் இணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் திறந்த பிறகு, வழக்கு வாபஸ் பெறுவதற்கான பணிகள் தொடங்கும். அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக இன்கோ-சர்வ் பிரிவில் இணைக்கப்படுவார்கள். இப்பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும் என நிர்வாகத்தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மருத்துவப் புத்தகம், போனஸ் உள்ளிட்ட சலுகைகளை நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கி வருகிறது. அவர்களுக்கு சட்டரீதியாக கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளையும் நிர்வாகம் வழங்கி வருவதாகவும் நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior