உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்

சென்னை:

                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகிறார்.   

                    திமுக அணியில் பாமக உள்ளதா? இல்லையா? என்ற கேள்வி நீடித்து வரும் நிலையில், கருணாநிதியும்,  ராமதாசும்  ஒரே மேடையில் பேசுகின்றனர். திமுக அணியில் பாமக இருப்பதாக முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவரும் அறிவித்தார். இதுகுறித்து தயக்கம் காட்டிய பாமக, கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாகத் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தனது முடிவை மாற்றிக் கொண்ட திமுக தானும் கட்சி நிர்வாகிகளை கலந்து ஆலோசித்த பிறகே கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வோம் எனக் கூறியது. இதனிடையே, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழுக்காக போராடும் ஒரே கட்சி தங்களது கட்சி மட்டுமே எனப் பேசினார்.  திமுக-பாமக இடையே அரசியல் ரீதியாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றவுள்ளனர்.  கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. மாநாட்டின் தொடக்க விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றுகிறார். 

                    இதில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். மாநாட்டு வளாகத்தில் பொதுக் கண்காட்சியை ஜூன் 24-ம் தேதி மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைக்கிறார். இணையதளக் கண்காட்சியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைக்கிறார். கவியரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை மாநாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளன. மாலை வேளையில் நாடகங்களும் அரங்கேறுகின்றன.  சிறப்புக் கருத்தரங்கம்: எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் ஜூன் 25-ம் தேதி சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர். அதில், பாமக நிறுவனர் பங்கேற்றுப் பேசுகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோரும் கருத்தரங்கில் பேசுகின்றனர். ஜூன் 27-ம் தேதி மாநாட்டு நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதில், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், ஆ.ராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior