கடலூர்:
மக்கள் நலத்திட்டங்களால் சாதனை படைப்பவர் முதல்வர் கருணாநிதி என்று, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தெரிவித்தார். கடலூர் அரசு சேவை இல்லத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடந்தது.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசியது:
5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதி மக்களுக்கு ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி, இலவச மனைப்பட்டா, இலவச நிலப்பட்டா, திருமண உதவித் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை வழங்கி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார். தற்போது உருவாக்கி இருக்கும் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் கிராமப் புறங்களில் குடிசை வீடுகளே இல்லை என்ற நிலை 4 ஆண்டுகளில் உருவாகும். நிகழ்ச்சியில் 69 பெண்களுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில், தலா ரூ.20 ஆயிரம் வழங்கினார். சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள, எழுதும் வசதி கொண்ட நாற்காலிகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் தாமரைச்செல்வன், நகராட்சி உறுப்பினர் நவநீதம் சாமுவேல் உள்ளிடோர் பேசினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக