உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

அரசுப் போக்குவரத்து துறைக்கு ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய்

கடலூர்:

                 தினமணி செய்தியின் எதிரொலியாக தமிழரக அரசின் போக்குவரத்துத் துறைக்கு, ஒரே மாதத்தில் ரூ. 2.5 கோடி கூடுதல் வருவாய் கிடைத்து இருக்கிறது.

                       புதுவை மாநிலத்தில் விற்பனை, சாலை வரி ஆகியவை குறைவாக இருப்பதால், தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர், புதுவை மாநிலத்தில் இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை வாங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் புதுவை மாநிலத்தில் போலி முகவரி கொடுத்து வாகனங்களை வாங்குகிறார்கள். இதற்கு புதுவை மாநில வாகன டீலர்களே, சட்ட விரோதமாக ஏற்பாடு செய்கிறார்கள்.

                    இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்புப் கொள்கை வேண்டும் என்பதற்காக மதிப்புக் கூடுதல் வரி (வாட்) அமலுக்கு வந்தது. அதை மதிக்காமல் வணிகர்களுக்கு சாதகமாக, புதுவை அரசு இருசக்கர வாகனங்களுக்கு இன்னமும் 4 சதவீதம் வரி விதிக்கிறது. ஆனால் தமிழகத்தில் ரூ. 12.5 சதவீதம் விற்பனை வரி. இதேபோல் சாலைவரி தமிழகத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை. ஆனால் புதுவையில் மிக்குறைவு.

                     இதனால்தான் பலர் புதுவையில் போலி முகவரி கொடுத்து, அந்த மாநிலத்துக்கு வரிகளைச் செலுத்தி வாகனங்களை வாங்கிக் கொண்டு, தமிழகத்தின் சாலைகளைத் தேய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சட்டப்படி இந்த வாகனங்கள் தமிழகத்தில் இயக்கப்படும்போது, வரி வித்தியாசத் தொகையை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். ஆனால் செலுத்துவது இல்லை. இவ்வாறு புதுவையில் வாகனங்களை வாங்கி தமிழகத்தில் இயக்குபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள். 

                     இவர்களைக் கண்காணித்து வரி வித்தியாசத் தொகையை வசூலிக்க வேண்டிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், வணிக வரித்துறை அலுவலர்களும் கண்டும் காணாமலும் இருந்து வருவதால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தினமணியில் ஓராண்டுக்கு முன் ஒன்றும், அண்மையில் ஒன்றுமாக, இரு செய்திக் கட்டுரைகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சாலை வரி வித்தியாசத் தொகையாக ரூ. 2.5 கோடி வசூல் ஆகி இருப்பதாக, கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.பி.ஜெயக்குமார் தெரிவித்தார். 31-5-2010 அன்று மட்டும் ரூ. 55 லட்சம் வசூல் ஆனது. கடலூரில் மாதத்துக்கு 450 வாகனங்கள் பதிவாகும். தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக, மே மாதத்தில் 673 இருசக்கர வாகனங்களும், 85 நான்கு சக்கர வாகனங்களும் கடலூரில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வருவாய் அதிகரித்து உள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

                      இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து ஆண்டு முழுவதும் மேற்கொண்டால், கடலூர் மாவட்ட போக்குவரத்துத் துறைமூலம் ஆண்டுக்கு ரூ. 10 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும். பல்வேறு இடங்களில் தணிக்கைச் சாவடிகள் இருந்தும், வணிகவரித் துறையும் விற்பனை வரி வித்தியாசத் தொகையை வசூலிக்காமல் கண்டும் காணாமலும் இருந்து கொண்டு இருக்கிறது. அவர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மேலும் அதிக வருவாய் தமிழகத்துக்குக் கிடைக்கும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதுவையில் பதிவாகும் வாகனங்கள் எண்ணிக்கை குறைவதால், பெருமளவுக்குக் குற்றங்கள் குறைந்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர். மேலும் புதுவை மாநிலத்தில் அதிகமாக வாகனங்களை வாங்கும், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் கூடுதல் வருவாய் கிடைக்கும். தமிழக அரசு இதுவரை இப் பிரச்னையில் ஏனோ கவனம் செலுத்தவில்லை. வரி வித்தியாசம் காரணமாக வாகனங்கள் வாங்குவோர் பெருமளவில் புதுவை மாநிலம் செல்வதால், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட மேற்கண்ட 5 மாவட்டங்களில் வாகனங்கள் விற்பனையும் சரியாக இல்லை. புதுவை மாநிலத்தில் வரிகுறைப்பால் பலன் அடைவோர், அந்த மாநில வாகன விற்பனையாளர்கள்தான். நஷ்டம் அடைவது புதுவை மாநில அரசு என்றும் கடலூர் வணிக் வரித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior