கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிட மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களைத் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்த்து இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மாணவ மாணவியரில் சிறப்பாகக் கல்வி பயில்வோரைக் கண்டறிய சிறப்புத்தேர்வு நடத்தப்பட்டது. 13 ஊராட்சி ஒன்றியங்களில், ஒன்றியத்துக்கு மூவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களில், ஒன்றியத்துக்கு ஒருவர் வீதம் முதல் இடம்பெறும் மாணவரைத் தேர்வு செய்ய புதன்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட 13 மாணவ மாணவியர் அவர்கள் விரும்பும் தலைசிறந்த, உண்டு உறைவிடக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டு, அரசு செலவில் பயிற்றுவிக்கப்படுவர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அங்கு பயிற்றுவிக்கப்படுவார்கள். கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர், அவர்கள் விரும்பும் தலைசிறந்த, உண்டு உறைவிப் பள்ளிகளில் சேர்ந்து பயிலவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அமுதவல்லி, மணவாள ராமானுஜம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருவேங்கடம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக