உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 10, 2010

வரப்பு இல்லாத விவசாயம்: புதிய செயல்திட்டம்

சிதம்பரம்:

                   கடந்த பல ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக அதிகளவு வேளாண்மை முதலீடுகள், குறைந்து வரும் லாபம், வானிலை மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக ஏற்படும் வேளாண் இழப்பீடுகளினாலும், பாகப்பிரிவினை காரணமாகவும் விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன.இவ்வாறு சாகுபடி பரப்பளவு குறைந்து வரும் சூழலில் விவசாயத்தில் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய முடியாத காராணத்தால் குறைந்த அளவு மகசூல் வரும் சூழல் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு மற்றும் குறு விவசாயிகள் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும், விவசாயிகளிடம் புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் பெறும் வகையில் புதிய விவசாய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். 

வரப்பு இல்லா விவசாயம்:  

                    விவசாய நிலப்பரப்புகள் வெகுவாக குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் பொருளாதார முன்னேற்றம், புதிய விவசாய தொழில்நுட்ப அறிமுகம், அதிகளவு சந்தை வாய்ப்புகளை அடிப்படையாக கொண்டுதான் வரப்பு இல்லா விவசாயம் என்ற புதிய விவசாய முறை இந்தியாவின் சில வேளாண் பகுதிகளில் நடைமுறையில் உள்ளது.இந்த புதிய விவசாய செயல்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விவசாய சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் சமூக அமைப்புகள் வாயிலாக சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாக சேர்ந்து ஒற்றுமையுடன் கூடிப் பேசி, தங்களின் சிறிய நிலங்களை வரப்புகளை அகற்றி ஒன்றுபடுத்த வேண்டும். இவ்வாறு கிராம அளவில் ஒன்றாக 10 முதல் 15 விவசாயிகள் ஒன்றாக சேரும் போது ஒரளவு அதிக பரப்பளவு நிலத்தை ஒன்றாக சாகுபடியின் கீழ் கொண்டு வர முடியும். பின்னர் மண் மற்றும் நீர் பரிசோதனை வாயிலாக அறிவியல் பூர்வமாக நிலத்தின் தன்மைக்கேற்ப சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

                   குறிப்பாக நிலத்தின் தன்மைக் கேற்ப ஒரு பகுதியில் காய்கள், தோட்டக்கலை பயிர்கள், சிறு தானியங்கள், கால்நடைகளுக்கு தேவையான தீவனப் பயிர்கள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேவைக்கேற்ப தேவைப்படும் வேளாண் விளை பொருள்களை நிலப்பரப்பிற்கு ஏற்ப திட்டமிட்டு சாகுபடி செய்யலாம். வரப்பு இல்லா விவசாயத்துக்கு நிலங்களை வழங்கிய விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கேற்ப வேளாண் விளை பொருள்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்புதிய செயல் திட்டத்தில் உருவாக்கப்படும் பொதுவான விவசாய கட்டமைப்புகளை பொதுவான விவசாய நிலப்பரப்புகளில் குறிப்பாக வாய்க்கால் பகுதிகளில், புறம்போக்கு இடங்களில் அமைத்துக் கொள்வதன் வாயிலாக பல நிகழ் மற்றும் எதிர்கால தேவை மற்றும் பொது பயன்பாடு பிரச்னைகள் ஏற்பட்டால் தீர்வுகள் பெறலாம். இவ்வாறு வரப்பு இல்லாத விவசாயத்தின் கீழ் செயல்படும் விவசாயிகள் ஒரு விவசாய சங்கமாக தங்களை பதிவு செய்து மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள், நலத்திட்டங்களில் பங்கு பெறும் வாய்ப்பும் உள்ளது.மேலும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களில் விவசாயிகள் கூட்டாக இணைந்து நிதி சேவைகளை பெறலாம். 

                     இச்செயல் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நிலங்கள் தனியாகவே பதிவு செய்யப்பட்டு பட்டா உள்ள நிலையில் தனி நபராகவும், விவசாய நலத்திட்டங்களில் பங்கு பெற முடியும்.பிற பயன்கள்: சிறு மற்றும் குறு விவசாயிகள் திட்டமிட்டு விவசாயப் பணிகளை இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுத்தும் போதும் அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய முடியும். உதாரணமாக சிறு விவசாயி தனிப்படை முறையில் ஆழ்கிணறுகள் தனியாக அமைப்பதை விட கூட்டாக அமைக்கும் போது செலவுகள் குறையும், பல புதிய விவசாய தொழில்நுட்பங்களாக சொட்டு நீர் பாசனம் ​(Drip​ irrig​ation),  தெளிப்பு நீர் பாசனம் ​(sprinkler​ Irrig​ation)​  ஆகியவற்றில் அதிகளவு வேளாண் முதலீடுகள் செய்து தங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை வெகுவாக பெருக்க முடியும்.விவசாயிகள் தங்கள் நிலத்தின் அளவுக்கு ஏற்பவும், தங்களின் மனித உழைப்புக்கு ஏற்பவும்  வரும் வருமானத்தை பகிர்ந்து கொள்ளலாம். வெளி ஊர்களில் உள்ள விவசாயிகளின் நிலங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் பல விவசாய நிலங்கள் உற்பத்தி இல்லாமல் தரிசாக கிடப்பது தவிர்க்கப்படும். அவர்களுக்கு விவசாயிகள் நிர்ணயம் செய்த குத்தகைப் பணத்தை பருவம் தோறும் வழங்கலாம். 

                       பெரிய வேளாண் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முன்பே விலை நிர்ணயம் செய்த விலையின் அடிப்படையில் வேளாண் விளை பொருள்களை உற்பத்தி செய்து விற்று அதிகளவு லாபம் பெறலாம.எனவே தமிழகத்தின் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாவதைத் தடுக்கவும், விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாக்கவும் இதுபோன்ற புதிய வேளாண் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து அதிகளவு உற்பத்திகள் வாயிலாக அதிகளவு லாபம் பெறலாம்.வரப்பு இல்லா விவசாயத்தை கிராமங்களில் அறிமுகம் செய்து, விவசாயிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிகளவு லாபம் பெற முடியும் என்கிறார் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior