பண்ருட்டி:
பண்ருட்டி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதியில் அறிவிக்கப்படாத மற்றும் தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்களும், பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகளும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் மின்சார பற்றாக்குறை காரணமாக பல பகுதியில் சுழற்சி முறையில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன்படி பண்ருட்டி நகரப் பகுதியில் 3 மணி நேரம் என இருந்து வந்த மின்வெட்டை சில தினங்களுக்கு முன் 2 மணி நேரமாக மாற்றியுள்ளதாக அறிவித்த மின்சார வாரியம், அவ்வப்போது ஏற்படும் உயர் மின் அழுத்த சுற்றின் நிலைமையைப் பொருத்து மின் நிறுத்த நேரம் மாறுபடும் என அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரு நாள்களாக நகரப் பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் தொடர்ந்து 104 டிகிரிக்கு மேல் வெளுத்து வாங்குகிறது. இதனால் மின் விசிறியோ, ஏசியோ இயங்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு காரணமாக மின் விசிறி மற்றும் ஏசிகள் இயங்காகதால் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக கிராமப் பகுதியில் மும்முனை மின்சாரம் ஒரு மணி நேரம் கூட ஒழுங்காக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாததால் பண்ருட்டி மற்றும் அண்ணாகிராம ஒன்றியப் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
நீரேற்ற முடியவில்லை:
இரவு பகல் என நேரப்படி மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டது, தற்போது மும்முனை மின்சாரம் முழுமையாக ஒரு மணி நேரம் கூட கிடைக்கவில்லை. இதனால் மேல்நிலைத் நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை என ஆபரேட்டர்கள் கூறினர்.
விவசாயிகள் வேதனை:
வறட்சி, விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை, உரம், பூச்சி மருந்து விலை ஏற்றம் உள்ளிட்ட இன்னல்களுக்கு இடையே நெல், வாழை, கரும்பு, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளோம். இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இச்சமயத்தில் மின்சாரமும் கிடைக்காததால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதிகாரிகள் விளக்கம்:
இது குறித்து மின்துறையைச் சேர்ந்த அதிகாரிகளிடம் விசாரித்ததில். காற்றாலைகள் மூலம் கிடைத்த மின்சாரம் கடந்த சில நாள்களாக கிடைக்கவில்லை. இதனால் மின் உற்பத்தி குறைந்து தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் விநியோகத்தை செய்து வருகின்றோம். நாளைய நிலை என்ன என்று கூறமுடியாது எனக் கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக