திடீர் கடல் கொந்தளிப்பு காரணமாக புதன்கிழமை காலை கடலூர் துறைமுகத்துக்கு அவசரமாகக் கரை திரும்பிய மீன் பிடிப் படகுகள்.
கடலூர்:
வங்கக் கடலில் திடீரென ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக, மீன் பிடிக்கச் சென்ற நூற்றுக்கணக்கான படகுகள் மீன் பிடிக்க முடியாமல் புதன்கிழமை காலை கரை திரும்பின.
கடலூரில் புதன்கிழமை காலை முதல், வானில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழைக்கு ஏதுவான சூழ்நிலை உருவானது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசியது. பகல் முழுவதும் சூரியனைக் காண முடியவில்லை. அவ்வப்போது லேசான மழைத்தூறல் காணப்பட்டது. கோடை வெப்பம் வெகுவாகத் தணிந்து இருந்தது. கடலூர் மற்றும் இந்த மாவட்டத்தின் கடலோர மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகளும், நூற்றுக்கணக்கான பெரிய இயந்திரப் படகுகளும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று இருந்தன. புதன்கிழமை இரவே மீன்பிடிக்கச் சென்று இருந்த இந்தப் படகுகள், கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்க முடியாமல், புதன்கிழமை காலையில் வேகவேகமாகக் கரைக்கு திரும்பின.
இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
வங்கக் கடலில் ஆழ்கடலில் திடீரென கொந்தளிப்பு ஏற்பட்டது. நீரோட்டம் மாறியது. இதனால் மீன்பிடிக்க முடியாமலும் பாதுகாப்பற்ற நிலையும் உருவானது. எனவே படகுகள் அனைத்தும் புதன்கிழமை அதிகாலை முதல் கரைக்குத் திரும்பின. மீன்கள் கிடைக்கவில்லை. மாலையில் அலைகள் சீற்றம் சாதாரண நிலைக்குத் திரும்பியது. கடல் கொந்தளிப்பும் சற்று தணிந்து காணப்பட்டது. இரவில் படகுகள் மீன் பிடிக்கச் செல்லும் என்று எதிர்பர்க்கப்படுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக