உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

விளைபொருளை பாதுகாக்க எளியவழி களிமண் பத்தையம்


பயிர்களை பாதுகாக்கும் பாரம்பரியமிக்க களிமண் பத்தையம்.
சிதம்பரம்:
 
             கடந்த சில ஆண்டுகளாக வேளாண் சந்தைகளில் தொடர்ச்சியாக உள்ள விலை ஏற்றத்தின் பலன்களை விவசாயிகள் பெற முடியவில்லை. அந்தப் பலன்களை இடைத் தரகர்கள், வியாபாரிகள், கமிஷன்தாரர்கள் பெற்று வருகின்றனர். இதனைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை பாதுகாத்து விற்பனை செய்து அதிக லாபம் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள் விரிவாக்கப் பணியாளர்கள் அதிகளவில் விவாதித்து வருகின்றனர். 
 
                இந்நிலையில் பாரம்பரியமிக்க களிமண் பத்தையம் உள்ளிட்ட பல்வேறு எளிய தொழில்நுட்பங்கள் மூலம் நெல் மற்றும் பயறு வகை விளை பொருள்களை பாதுகாத்து வேளாண் சந்தையில் விலை உயரும் சமயத்தில் அவற்றை விற்று அதிக லாபம் பெறலாம்.களிமண் பத்தையம்: சிறு மற்றும் குறு விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து தங்களது விளை பொருள்களை இயற்கை சீற்றங்கள், வன விலங்குகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கவும், சாலை வசதி இல்லாத கிராமங்களில் குறைந்த அளவே போக்குவரத்து வசதிகள் உள்ள காரணத்தால் பாரம்பரிய முறையை பின்பற்றி விவசாயிகள் பெரிதும் பயன் அடையலாம். குறிப்பாக வன விலங்குகள் அதிகம் காணப்படும் கடலோரப் பகுதிகளிலும், ஆதிவாசிகள் வசிக்கும் காடுகள் அடங்கிய பகுதிகளிலும் அதிகளவில் இந்த களிமண் பத்தையங்களை பயன்படுத்தலாம்.
 
தயாரிப்பது எப்படி: 
 
               சிறு தானியங்கள், பயறு வகை தானியங்கள், தீவனப் பயிர்கள் அதிகளவில் பாதுகாக்கப் பயன்படும் பாரம்பரிய களிமண் பத்தையங்களை சிறு மற்றும் குறு விவசாயிகள், பண்ணை மகளிர், கிராமப்புற குயவர்கள் இணைந்து செய்கின்றனர்.குயவரின் உதவி: வேளாண் சாகுபடிப் பணிகள் முடிந்த பின் வேளாண் விளைபொருள்களை எளிதான முறையில் குறைந்த செலவில் பாதுகாக்க தங்களின் வீடுகளுக்கு அருகில் உள்ள நல்ல வடிகால் வசதியுள்ள நிலம் தேர்வு செய்யப்படுகிறது. பின்னர் நிலம் உழவியல் மற்றும் வேளாண் பணிகள் வாயிலாக சமன் செய்யப்படுகிறது. பின்னர் கருங்கல் கொண்ட ஒரு அடித்தளம் அமைக்கப்படுகிறது. 
 
              பின்னர் நிலத்துக்கு சற்று தொலைவில் குழிகள் தோண்டி களிமண் கலவையைக் கொண்டு குயவர்கள் உதவியுடன் ஒரு பெரிய பானை வடிவில் தங்களின் விளைபொருள் அளவு, தேவையை கருத்தில் கொண்டு ஒரு பத்தையம் அமைக்கப்படுகிறது.இவ்வாறு அமைக்கப்படும் களிமண் பத்தையம் விளைபொருள்களின் தன்மைக்கேற்ப உறுதியான வடிவமைப்புடன், கனத்துடன் தேவைப்படும் காலத்திற்கேற்ப அமைக்கப்படுகிறது. பின்னர் வானிலை அல்லது வெப்பத்தின் அளவின்படி இரண்டு முதல் ஒரு வார காலம்  காயவைக்கப்படுகிறது. 
 
                  கோடை மழை அல்லது மழை பெய்யும் நிலை காணப்பட்டால் விவசாயிகள் களிமண் பத்தையத்துக்கு அருகில் புகை மூட்டம் போட்டு காய வைக்கும் பழக்கமும் உள்ளது. பின்னர் களிமண் பத்தையம் நன்றாக காய்ந்த உடன் விவசாயிகள் விளைப் பொருள்கள் பத்தையத்தின் உள்ளே வைக்கப்பட்டு வேப்ப இலைகளுடன் கலந்து பாதுகாக்கப்படுகிறது. பின்னர் களிமண் பத்தையம் முழுவதும் விவசாய பொருள்கள் கொண்டு நிரம்பிய உடன் களிமண் கலவை கொண்டே காற்றுக்கூட புகாமல் மூடப்படுகிறது. பின்னர் மழை, வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க கூம்பு வடிவில் தென்னை மற்றும் பனை இலைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வளையம் கொண்டு மூடப்படுகிறது. சில விவசாயிகள் தண்ணீர் வடிய பாலிதீன் அல்லது பிளாஸ்டிக் சாக்குகளை பத்தையத்தின் மேல் போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
 
பிற பயன்கள்: 
 
               குறைந்த செலவில் சிறு மற்றும் குறு விவசாயிகள் நீண்டநாள் தங்களின் விளை பொருள்களை பாதுகாத்து வேளாண் சந்தைகளில் விற்று அதிக லாபம் பெற முடியும்.  போக்குவரத்து வசதிகள் இல்லா தமிழக கிராமங்களில் இடைத்தரகர்கள், வியாபாரிகள் வரும் வரை விளைப் பொருள்களை பாதுகாக்க உதவுகிறது. வன விலங்குகள், இயங்கை சீற்றங்கள் போன்றவற்றிலிருந்து தங்களது விளை பொருள்களை பாதுகாக்க உதவுகிறது. பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்காமல் சேமிக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகிறது. எனவே தமிழக விவசாயிகள் அறுவடைக் காலத்தில் வேளாண் சந்தைகளில் குறைந்த விலையில் தங்களது விளை பொருள்களை விற்பனை செய்யாமல் குறைந்த செலவில் பாதுகாத்து வேளாண் சந்தையில் அதிகளவில் விலை ஏற்படும் போது விற்பனை செய்ய இது போன்ற பாரம்பரியமிக்க களிமண் பத்தையம் உறுதுணையாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் கூறுகிரார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior