கடலூர் நகைக்கடை ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் தங்க நகைகள்.
கடலூர்:
வரும் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அட்சய திரிதியை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் சுபதினம். அண்மைக் காலமாகத் தான் அட்சய திரிதியை அனைவராலும் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. நகைக் கடைகள் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே நகைகளைச் சேமிக்கத் தொடங்கிவிட்டன. மக்களும் தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விட்டனர். நகைக் கடைகள் போட்டிபோட்டு செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சிகளிலும், செய்தித்தாள்களில் துண்டுப் பிரசுரமாக இணைத்தும், அலங்கார நகைகளை அணிந்த நடிகைகளின் புகைப்படங்களை கவர்ச்சியுடன் அச்சிட்டும், மக்களை ஈர்க்கும் விளம்பரங்களை அள்ளித் தெளித்து வருகின்றன.அட்சய திரிதியை தினத்தில் ஒரு கிராம் தங்கமாவது வாங்கினால், ஆண்டு முழுவதும் வளம் கொழிக்கும் என்பது நம்மில் பலரது நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியதுதான்;
நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனால் நம்பிக்கையை பயன்படுத்தி நம்மை யாரும் ஏமாற்றவிடக் கூடாது என்பதில், நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் அல்லவா இருக்க வேண்டும்?வசதி படைத்தவர்கள் அட்சய திரிதியை தினத்தில் நகைக் கடைகளுக்குச் சென்று நகை வாங்குவதில் சங்கடம் எதுவும் இருக்காது. ஆனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் நிலை... பலர் வட்டிக்குக் கடன் வாங்கியும், சேமிப்பில் இருந்து பணம் எடுத்தும், நண்பர்களிடம் கைமாற்று வாங்கியும், தண்டலுக்குப் பணம் வாங்கியும் அட்சய திரிதியையில் நகை வாங்கிட முடிவெடுக்கிறார்கள். அப்படியெனில் அவர்கள் எத்தகைய எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.முறையான ரசீது செய்கூலி, சேதாரம் எவ்வளவு என்று கேட்டுத் தெரிந்து கொண்டு தங்கம் வாங்க வேண்டும். துண்டுச் சீட்டுகளில் எழுதிக் கொடுக்கும் எஸ்டிமேட், விலைப் பட்டியல் போன்றவை அந்தக் கடைக்காரருக்கு மட்டுமே ஏற்புடையது. ஏதேனும் பிரச்னை வந்தால் நுகர்வோர் நீதிமன்றம் செல்ல அது போதாது. முறையான ரசீது வேண்டும். அதனை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும்.
ரசீது வழங்கினால் வரி செலுத்த வேண்டும் என்பார்கள். நகைகளுக்கு ஒரு சதம் வரி வசூலிக்கப்படுகிறது. அரசுக்கு வரி செலுத்துவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் கடமை. நாம் விற்பனை வரி செலுத்துவதன் மூலம் மாநில அரசுக்கு வருவாயும், சம்பந்தப்பட்ட கடைக்காரரை முறையான வருமான வரி செலுத்தவும் வைக்க முடியும். அட்சய திரிதியை தினத்துக்கென்றே தனிப்பட்ட தயாரிப்பு நகைகளை பல நகைக் கடைக்காரர்கள் விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள். அட்சய திரிதியை தினத்தில் பெரும்பாலான நகைக் கடைகளில், எள் விழுந்தால் எண்ணை ஆகிவிடும் அளவுக்கு கூட்டம் அலைமோதுகிறது. கால்கடுக்க நின்று வாங்கிய தங்கம், தரமற்றதாக இருந்தால் என்ன பயன் எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தரமற்ற நகைகளை விற்பனை செய்வது சட்ட விரோதம். ஹால்மார்க் முத்திரை தங்க நகைகளை வாங்கும்போது அவற்றை விற்பனை செய்யும் கடை முத்திரை, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
ஹால் மார்க் முத்திரையிலும் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் முத்திரை, துல்லிய எண், சோதனைச் சாலை எண், நகை தயாரித்தவரது பதிவு எண், தயாரித்த ஆண்டு இவைகள் எல்லாம் இருக்க வேண்டும்.ஹால்மார்க் முத்திரையிலும் 12 கேரட் முதல் 22 கேரட் வரை உள்ளது. எத்தனை கேரட்டுக்காக வழங்கப்பட்ட ஹால்மார்க் முத்திரை என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் விற்பனை செய்யப்பட்ட ஹால்மார்க் தங்க நகைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 70 சதம் நகைகள் தரம் குறைந்ததாக இருந்தது கண்டறியப்பட்டது. எனவே நாம்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தங்கம் வாங்குவதில் அவசரம் வேண்டாம். தரமான தங்கத்தை என்றும் வாங்கலாம் என்கிறார், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன். கடைகளில் வாங்கப்பட்ட நகைகளில் தரம் குறித்த பிரச்னை எழுந்தால், ரசீது இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் பிரச்னை எழுந்தால் உதவி இயக்குநர், இந்தியத் தர நிர்ணய நிறுவனம் (ஆஐந) சி.ஐ.டி. காம்பஸ், 4-வது குறுக்குத் தெரு, சென்னை 113 என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம். அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்குதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு கடலூரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) விழிப்புணர்வுப் பிரசாரம் செய்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக