உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி?


              கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ரேஷன் அட்டை பெறுவது எப்படி என்பது குறித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். 
 
சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் இரா.ராஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:
 
                 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று ஒருபகுதியும், கணவனால் முறையாக விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்கள் என இரண்டு வகைப் பிரிவினருக்கும் ரேஷன் அட்டை வழங்க பரிசீலிக்கப்பட்டது. அதில், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் கணவர் குடும்பம் எந்த முகவரியில் வசிக்கிறார் என்ற முகவரியுடன் விண்ணப்பிக்க வேண்டும்.அந்த முகவரிக்குச் சென்று விவரங்களை அறிந்து அதன்மூலமாக நீக்கல் சான்றுகள் துறையின் சார்பாகவே பெறப்படும். அதன்பின்பு, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தனியாக இருந்தால் தனி அட்டையாகவும், குடும்பத்தோடு பெற்றோர்களுடன் இருந்தால் அந்த அட்டையிலே இணைத்து ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகிறது. விவாகரத்து செய்திருக்கின்ற பெண்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாகப் பெறப்பட்ட உத்தரவு நீக்கல் சான்றாகக் கருதப்படும். அதையே வைத்து அந்தக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழகம் முழுவதும் இதுவரை 991 திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அடுத்த 10 தினங்களில் மேலும் 16 பேருக்கு வழங்கப்பட உள்ளன. 9 பேருக்கு பரிசீலனையில் உள்ளது.காதல் திருமணம்: காதல் மற்றும் கலப்புத் திருமணங்கள் புரிந்தோருக்கு சம்பந்தப்பட்ட குடும்பங்களில் இருந்து நீக்கல் சான்று பெறுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு விதிகள் தளர்த்தப்பட்டு பெற்றோர் ரேஷன் அட்டையின் நகல் அல்லது ரேஷன் அட்டை எண், அங்காடிக் குறியீட்டு எண், பெற்றோர் பெயர்,ரேஷன் அட்டையின் முகவரி, பெற்றோர்கள் குடியிருக்கின்ற முகவரி, திருமணப் பதிவுச் சான்று அளிக்க வேண்டும். இவற்றை விண்ணப்பத்துடன் இணைத்துத் தர வேண்டும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தங்குகிற இடங்களுக்குச் சென்று விசாரணை செய்யப்பட்டு உரியவர்களுக்கு 60 நாளில் அட்டை வழங்கப்படும் என்றார் எ.வ.வேலு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior