சிறுபாக்கம் :
தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு வருவதால் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் மானாவாரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. இதில் மல்லி, பருத்தி, மக்காச்சோளம், மணிலா, வரகு உள்ளிட்ட பயிர்கள் விளைவித்து வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவம் தவறிய மழை, பணியாளர்கள் தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர் செய்வதில் ஆர்வமின்றி இருந்தனர். பல தடைகளை மீறி பயிரிட்ட விவசாயிகளும் இயற்கை சீற்றம் காரணமாக போதிய விளைச்சல் இன்றி நஷ்டமடைந்தனர்.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் தங்கள் நிலங்களை வந்த விலைக்கு விற்று விட்டு வேறு தொழிலுக்கு மாறினர். பலர் குடும்பத்தை கிராமத்தில் விட்டுவிட்டு வேலை தேடி வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வேப்பூர் வழியாக செல்லும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள வேப்பூர் பகுதியில் கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன. தொடர்ந்து இப்பகுதியில் நிலங்கள் விலை குறைவாக கிடைப்பதால் பெரும் தொழிலதிபர்கள் தங்களின் எதிர்கால தேவைக்காக விளை நிலைங்களை வாங்கினர். இதனை அறிந்த கோவை, ஈரோடு, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முதலாளிகள் இப்பகுதியில் முகாமிட்டு வேப்பூர், ஐவதுகுடி, கண்டப்பங்குறிச்சி, பெரியநெசலூர், நாரையூர், ராமநத்தம், வெங்கனூர், கழுதூர், ஆவட்டி கூட்டுரோடு, மங்களூர், விருத்தாசலம் - சேலம் நெடுஞ்சாலையில் விளம்பாவூர், அடரி, சிறுபாக்கம் பகுதிகளில் சாலையோரம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விளை நிலங்களை விலைக்கு வாங்கி மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு முன் ஒரு ஏக்கர் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விலை போனது தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள நிலங்களுக்கு 3 முதல் 10 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி பிளாட் போட்டுள்ளனர். அனைத்து வசதிகளும் உள்ளதாக தெரிவித்தும், அபிரிமிதமான பரிசுகளை அறிவித்தும் வியாபாரம் செய்கின்றனர். மானாவாரி நிலங்களே கூடுதல் விலை போவதால், இப்பகுதியில் நீர் பாசனத்துடன் நன்கு விளைச்சல் உள்ள நிலங்களையும் ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் விற்க விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். இதனால் ஓரிரு ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வேப்பூர், கழுதூர், ஐவதுகுடி, ராமநத்தம் பகுதிகளில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பிரதான உப தொழிலாக விளங்கி வரும் கால்நடை வளர்ப்பும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நன்கு விளைச்சல் தரக்கூடிய நிலங்களை மனைகளாக மாற்றுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக