விருத்தாசலம் :
மங்கலம்பேட்டை கோவில் பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மங்கலம்பேட்டை ஓட்டை பிள்ளையார் கோவில் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத் தில் கடந்த 2002ம் ஆண்டு பொதுமக்களால் அய்யப்பன் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோவிலில் குருசாமியாக இருந்த வெங்கடேசன் கடந்த மாதம் இறந்தார். அதனையடுத்து பொதுமக்கள் கோவிலை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இந்நிலையில் இறந்த வெங்கடேசன் மனைவி சரோஜா நேற்று மாலை கோவில் முன் நின்று எனது கணவருக்குப் பின் எனது மகன் கோபி (21) தான் குருசாமியாக செயல்பட வேண்டும் என கூறினார். இதனால் பொதுமக்களுக்கும் சரோஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை சாலையில் மாலை 5.15 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., ராஜசேகரன், பேரூராட்சி தலைவர் கோபுபிள்ளை, வி.ஏ.ஓ., இளங்கோவன் முன்னிலையில், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோவில் பிரச்னையை ஆர்.டி.ஓ., தலைமையில் பேசி முடிவு செய்யலாம் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக