உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 13, 2010

ஒரு கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஒருவர் கைது

கடலூர் : 

                இரண்டு மாதத்தில் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் என்.எல்.சி., ஊழியர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

              கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 25- இன்ஜினியர் நகரைச் சேர்ந்தவர் செல்வமணி (39); என்.எல்.சி., ஊழியர். இவர் சகோதரர், கோவிந்தராஜ் (37). சென்னை கோயம்பேடு ஆற்காடு சாலையில் உள்ள லட்சுமி டவர்சில், கடந்தாண்டு, 'நியூ கோல்டன் மார்க்கெட்டிங்' என்ற பெயரில் நிறுவனம் துவங்கினர். இவர்கள், தங்களிடம் பணம் முதலீடு செய்தால், இரண்டு மாதத்தில் இரட்டிப்பு தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை துவக்கினர்.

                 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜன்டுகளை நியமித்து, தங்கள் திட்டத்தில் பலரை சேர்த்தனர். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற, செலுத்தும் தொகைக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டிக்கான காசோலையை, முன்கூட்டியே வழங்கினர். ஆரம்பத்தில் 10 ஆயிரம், 20 ஆயிரம் முதலீடு செய்தவர்களுக்கு, உரிய முதிர்வு தொகை வழங்கப்பட்டது. இதை நம்பி, பழைய வாடிக்கையாளர்களோடு புதிய வாடிக்கையாளர்கள் பலரும் முதலீடு செய்தனர். இவர்களுக்கு உரிய முதிர்வு தொகை வழங்காமல் ஏமாற்றி வந்தனர்.
இந்நிறுவனத்தில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி ஏமாற்றம் அடைந்த, சிதம்பரம் காயத்ரி அம்மன் கோவில் தெரு அருணாச்சலம் (37), கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் செய்தார். டி.எஸ்.பி., வசந்தா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதி, ராஜேந்திரன், ஏட்டு திருநாவுக்கரசு ஆகியோர், விசாரணை செய்தனர்.

                  அருணாச்சலத்தைப் போன்றே, கடலூர், விழுப்புரம், சேலம், ஈரோடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 90க்கும் மேற்பட்டவர்களிடம், ஒரு கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிந்தது. மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்த கோவிந்தராஜை, கடந்த 9ம் தேதி சென்னையில் கைது செய்தனர். பின் அங்குள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள செல்வமணியை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior