கடலூர்:
கடலூரில் புதன்கிழமை வெயில் கடுமையாகச் சுட்டெரித்தது. கடலூரில் சுனாமி பீதியுடன் கத்திரி வெயில் தொடங்கி இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன் பெய்த கோடை மழையால், தொடக்கத்தில் வெப்பம் குறைந்து காணப்பட்டது. எனினும் கத்திரி வெயில் தொடங்கியதும் வெயில் தகிக்கத் தொடங்கிவிட்டது.
இப்போதே வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடலோர நகரமாக இருந்தபோதிலும், கடலூரில் வெயில் கடுமையாகவே உள்ளது. எத்தனை கடற்காற்று வீசினாலும் வெப்பக் காற்றின் தாக்கத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. மின் விசிறிகள் எவ்வளவு வேகத்தில் சுழன்றாலும் வியர்வைக் குளியலில் இருந்து மீளமுடியாத வெப்ப நிலை காணப்பட்டது.
கடலூரில் வெயில் அளவு 98 டிகிரியாக இருந்தபோதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. வெப்பத்துடன் வியர்வை அதிகரிப்பும் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. காலை 6-30 மணியில் இருந்தே வெயிலின் தாக்கம் தொடங்கி விடுகிறது. இதனால் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்வோர்கூட மிகுந்த பாதிப்புக்கு உள்ளாயினர். ÷அதிக வெப்பம் காரணமாக கடலூர் வீதிகளில் பகல் நேரத்தில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர் தொப்பி அணியத் தொடங்கி விட்டனர். பலர் முகத்தில் கைத்துண்டுகளைக் கட்டிக் கொண்டும் பயணிப்பதைப் பார்க்க முடிகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் மின்வெட்டு, மக்களை மேலும் வாட்டி வதைப்பதாக உள்ளது. கடலூர் சில்வர்பீச்சில் புதன்கிழமை கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கடலில் குளிக்க வேண்டாம் என்ற காவல் துறையின் எச்சரிக்கையையும் புறம் தள்ளிவிட்டு, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஏராளமானோர் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக